டெல்லி: சென்னை – சேலம் இடையேயான 8 வழி சாலை அமைக்க நிலம் கையகப்படுத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று மேல்முறையீடு செய்துள்ளது. இம்மனு மீது ஜூன் 3-ந் தேதி விசாரணை நடைபெற உள்ளது.
புதிய 8 வழிச்சாலை அமைப்பதற்காக வயல்வெளிகள், தென்னந்தோப்புகள், வீடுகள், கிணறுகள் என விவசாயிகளின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் கையகப்படுத்தும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியது. இதற்கு எதிராக பொதுமக்கள் படுதீவிரமாக கொந்தளிப்புடன் போராடினர்.
ஆனாலும் அதைப்பற்றி கவலைப்படாத தமிழக அரசு, விளை நிலங்களில் வலுக்கட்டாயமாக அடையாள கற்களை நட்டு விவசாயிகளை கதற வைத்தது. இதற்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும் போராடின.
அரசாணை ரத்து
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டன. இவற்றை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 8 வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்த தடை விதித்தது. மேலும் நிலம் கையகப்படுத்துவதற்காக தமிழக அரசின் அரசாணையையும் ஏப்ரல் 8-ல் உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
விவசாயிகள் மகிழ்ச்சி
இத்தீர்ப்பை விவசாயிகள் பொங்கல் திருவிழாவைப் போல கொண்டாடி மகிழ்ந்தனர். தங்களது விளைநிலங்களில் கட்டாயமாக நடப்பட்ட அடையாள கற்களை பிடுங்கி எறிந்தனர்.
தோல்விக்கு காரணம்
ஆனாலும் அதிமுக அரசு இத்திட்டத்தை செயல்படுத்துவோம் என அறிவித்தது. அண்மையில் லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணி படுதோல்வி அடைந்ததற்கு அரசின் 8 வழிசாலை திட்டமும் முக்கிய காரணமாகும். உயர்நீதிமன்றம் தடை விதித்த போதும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் 8 வழிச்சாலை அமைந்தே தீரும் என கூறி வந்தனர்.
உச்சநீதிமன்றத்தில் அப்பீல்
இந்நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தடையை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீது ஜூன் 3-ந் தேதி விசாரணை நடைபெற உள்ளது.
விவசாயிகளிடையே கொந்தளிப்பு
மத்தியில் மோடி தலைமையிலான புதிய அரசு நேற்றுதான் பதவியேற்றது. அந்த அரசு பதவியேற்ற மறுநாளே தமிழக அரசு, மக்கள் விரோத 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது. தமிழக அரசின் இந்நடவடிக்கையானது சேலம் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு கமிஷனுக்காகத்தான் இந்த 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த இப்படி துடியாய் துடிக்கிறது என்கின்றனர் விவசாயிகள்.
பழிவாங்கும் அதிமுக
மேலும் லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்ததற்காக பழிவாங்கவே இத்தகைய நடவடிக்கையை அதிமுக அரசு மேற்கொண்டிருக்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகவே அதிமுக, பாஜக அரசுகள் செயல்படுகின்றன என்பதும் விவசாயிகளின் குற்றச்சாட்டு. தமிழக அரசின் மேல்முறையீட்டு விசாரணைக்கு தடை கோரியும் சூழல் அமைப்புகள் உச்சநீதிமன்றத்தின் கதவுகளை தட்ட இருக்கின்றன.