இந்தித் திணிப்பு எதிர்ப்பு: மும்மொழிக் கொள்கைக்கு தமிழகத்தில் எதிர்ப்பு ஏன்?

புதிதாக உருவாக்கப்படும் தேசியக் கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையைத் தயாரித்த கஸ்தூரி ரங்கன் குழு, இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி கட்டாய மொழியாக கற்பிக்கப்படவேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது.

தமிழகத்தில் தொடங்கி பல மாநிலங்களிலும் இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை இந்த வரைவு அறிக்கையை மாற்றியமைத்துள்ளது. இந்தி கட்டாயம் என்பதற்குப் பதில், வேறு ஏதாவது ஓர் இந்திய மொழியை மூன்றாவது மொழியாக கற்றுக்கொள்ளவேண்டும் என்று தற்போதைய வரைவு அறிக்கை கூறுகிறது.

இந்தி கட்டாயம் என்பது மாற்றப்பட்டாலும் மும்மொழி கொள்கை என்பதுவும் மறைமுகமாக இந்தி திணிப்புதான் என்றும், தமிழகத்தில் தற்போதுள்ள இருமொழிக் கொள்கையே போதுமானது என்றும் தமிழகத்தில் குரல்கள் எழுகின்றன.

இந்த எதிர்ப்பு தமிழகத்தில் வலுவாக இருப்பதற்கான காரணம் என்ன என்ற கேள்வியும் தொடர்கிறது.

தொல்லியல் ஆர்வலரும் ஓய்வுப்பெற்ற ஐ.ஏ.எஸ். அலுவலருமான பாலகிருஷ்ணனிடம் இது பற்றிக் கேட்டது பிபிசி தமிழ்.

இந்தி திணிப்பு என்ற சொல்லும், எதிர்வினையும் தற்காலத்தைச் சேர்ந்தவைதான். இதற்கு திராவிட இயக்கத் தொடர்பு உள்ளது என்ற எண்ணம் அனைவருக்கும் தோன்றும். ஆனால் இந்த எதிர்ப்புணர்வின் வேர் மிகப் பழையது என்று கூறுகிறார் பாலகிருஷ்ணன்.

ஆர். பாலகிருஷ்ணன்
ஆர். பாலகிருஷ்ணன்

அவர் மேற்கொண்டு கூறியவை:

பண்டைய தமிழகத்தில் வைதீக கருத்துகளோடு சேர்த்து வடமொழி சார்ந்த பண்பாட்டு கூறுகள் கலந்தபோது அதற்கான எதிர்வினையை சங்க இலக்கியம் மிகத்தெளிவாக பதிவு செய்கிறது. அது இன்றும் தொடர்கிறது அவ்வளவுதான்.

தமிழ் மொழி சார்ந்த கருத்தியலுக்கும் வடமொழி சார்ந்த கருத்தியலுக்கும் இடையிலான முரண் சங்க காலத்திலேயே இருந்தது. இப்போதைய இந்தி தொடர்பான கருத்துகளும் அதன் தொடர்ச்சிதான். நவீன காலச் சூழலின் தேவை கருதி அது பண்பாட்டு அடையாளம், வாழ்வியல், கல்வி, வாழ்வாதாரம் மற்றும் சம கால அரசியல் ஆகிய அனைத்தும் கலந்த கூட்டுணர்வாக வெளிப்படுகிறது. இதில் வியப்பொன்றும் இல்லை என்கிறார் பாலகிருஷ்ணன்.

மேலும், “நான் தமிழ் இலக்கியத்தை தவிர வேறு எதையும் படித்ததில்லை. தமிழ் இலக்கிய மாணவன், தமிழில் ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதி முதன் முதலில் 1984ல் வெற்றி பெற்றேன். தவறில்லாமல் ஆங்கிலம் எழுதுவது பேசுவதுகூட சுய முயற்சிதான்.

தாய் மொழியில் தேர்ந்தவன் தேவைப்படும்போது கூடுதல் மொழிகளால் தன்னை மேலும் வலுப்படுத்திக் கொள்வான்” என்கிறார் அவர்.

உயிரெழுத்து அ

அனைத்து தாய் மொழிகளும் சிறந்தவை தான். ஆனால் ஒரு மொழிக்கான ஊட்டச்சத்து இன்னொரு மொழியை சோகையாக்கும் என்றால் அது ஆரோக்கியமானதல்ல. சமஸ்கிருதம் மட்டுமே இலக்கியம் மற்றும் அனைத்து அறிவுசார்ந்த, கலை சார்ந்த ஆவண மொழியாக ஆதரிக்கப்பட்டதால்தான் ஏனைய இந்திய மொழிகள் வளரவில்லை.

பல மாநில மொழிகளின் இலக்கிய வரலாறே இடைக்காலத்திலும் பிற்காலத்திலும் தான் தொடங்குகிறது. இதற்கு ஒரு வகையில் சமஸ்கிருதம் காரணம்.

தமிழ் முற்றிலும் மாறான தொன்மையான மொழி என்பதால் இந்த பிரச்சனை அவ்வளவு ஆழமாக தமிழை பாதிக்கவில்லை.

யார் ஆண்டாலும் தமிழ் வாழும் என்பது தமிழ்ச் சமூகத்தின் வழிமுறை. ஒரு மூத்த மொழி என்ற‌ முறையில் தமிழ் இந்தியாவின் ஏனைய தாய் மொழிகளின் பாதுகாப்பிற்கும் சேர்த்துதான் குரல் கொடுப்பதாக எனக்கு தோன்றுகிறது என்கிறார் பாலகிருஷ்ணன்.

மாணவர்கள்

இந்தியப் பண்பாடு என்று நாம் இப்போது சொல்கிற கட்டமைப்பில் ஓர் அடிப்படையான பங்களிப்பு தமிழுக்கு உண்டு. எனவே, இந்த உணர்வு இத்தகைய பின்னணியில் புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்கிறார் பாலகிருஷ்ணன்.

ஒரு மொழியினை கற்றுக் கொள்வதால் என்ன சிக்கல், மும்மொழிக் கொள்கை ஏன் விவாதப் பொருளாகியுள்ளது என்ற கேள்விகளை, தமிழ் மையம் அமைப்பின் நிறுவனரும், பன்மொழி அறிந்தவருமான ஜெகத் கஸ்பரிடம் முன்வைத்தபோது, தாய்மொழியினை சரியாக விரிவாக இலக்கணக் கூறுகளோடு கற்றுக்கொண்டால், உலகின் எந்த மொழியினையும் கற்றுக்கொள்ளலாம் என்றார்.

இந்தியா என்பது ஒரு ஒற்றை தேசிய நாடு அல்ல, பல்வேறு இனங்களின் கூட்டுத்தொகுப்பு. அந்த பல வேறு இனங்களில், ஒவ்வோர் இனத்தின் தனித்துவம் என்பது மொழி அடிப்படையில் வரையறுக்கப்படுகிறது என்றார்.

இந்த இனக்குழுக்களின் மொழிகள் அனைத்தும் நாட்டினுடைய மொழிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, ஆங்கிலம் என்பது ஒரு தொடர்பு மொழியாகவும், இந்தி என்பது ஓர் அரசு அலுவல் மொழியாகவும்தான் ஏற்கப்பட்டது.

ஜெகத் கஸ்பர்
ஜெகத் கஸ்பர்

இந்த சூழலில் எதற்கு இந்தியினை திணிக்க வேண்டும். 1959ல் ஆவது இந்தியாவில் வாழ்ந்த பெரும்பான்மையினருக்கு வாழ்ந்தவர்களுக்கு ஆங்கிலமொழி தெரியாது என்ற நிலை இருந்தது.

ஆனால் இன்று தமிழர்களை பொறுத்தவரை ஆங்கிலத்தினைக் கொண்டு எந்த இடத்திலும் சமாளித்துவிட முடியும் என்ற நிலையில், இந்தி கட்டாயமாக திணிக்கப்படுவது அவசியமற்றது.

அப்படியே அதில் எனக்கு அனுகூலம் ஏற்பட இருக்கின்றது என்றால் நான் படித்துவிட்டு போகிறேன், ஏன் திணிக்கிறீர்கள்? என்பதுதான் இங்கு கேள்வியாக இருக்கின்றது என்கிறார் ஜெகத் கஸ்பார்.

தமிழ் இருக்கை

மொழிப்பற்று என்பதனை தமிழ் மொழிப் பற்றாக மட்டும் நான் பார்க்கவில்லை. 1000 பேர் மட்டுமே பேசுகின்ற மொழியாக இருந்தாலும் நாம் அந்த மொழியினை பாதுகாக்க வேண்டும். ஏனெனில் அது அந்த மக்களின் மொழி. அந்த மொழி சார்ந்த அறங்களை அவர்கள் உருவாக்கி இருப்பார்கள்.

அந்த அறங்களை, வாழ்வியல் அனுபவங்களை கடத்துகின்ற கவிதைகளை, இலங்கியங்களை அவர்கள் உருவாக்கி இருப்பார்கள். இவற்றை எல்லாம் பாதுகாக்கிற முயற்சியாகத்தான் மொழி பாதுகாப்பினை நாம் எடுத்து செல்ல வேண்டும்.

எனவே, தமிழுக்கான போராட்டம் என்பது , அனைத்து இந்திய மொழிகளுக்காவும், அனைத்து உலக மொழிகளுக்காவும் ஆன ஒரு வாதிடுதல் அல்லது போரிடுதலாகத்தான் நாம் எடுத்துக் கொள்ளவேண்டும் என்கிறார் அவர்.

‘மொழிப்போர் ஈகியர் வரலாறு’ நூலின் ஆசிரியர் ந.செந்தலை கவுதமனிடம் இது பற்றி கேட்டபோது, அனைத்து மொழிகளுக்கும் இடையில் சமத்துவம் நிலவுவதுதான் விடுதலையின் அடையாளம். இந்தியாவில் 22 மொழிகள் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டவை. 22 மொழிகளும் எட்டாவது அட்டவணையில் அரசியல் சட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

தமிழர்கள் இந்தி திணிப்புக்கு எதிராக மட்டும் போராடவில்லை. இந்திய விடுதலைக்கு முதலில் குரல் கொடுத்தவர் பூலித்தேவன். அதிகமாக தண்டனை பெற்றவர் வ. உ. சிதம்பரனார். ஆக, ஆதிக்கம் எந்த வடிவில் வந்தாலும் போர்க்குணத்தோடு எதிர்ப்பது தமிழ் மரபு.

செந்தலை கவுதமன்

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் அல்லாது, தமிழகத்தில்தான் 1938ம் ஆண்டியிலேயே இந்தி கட்டாயமாக்கப்பட்டது. எங்கே திணிப்பு நடைபெறுகிறதோ அங்கு எதிர்ப்பு இருக்கத்தானே செய்யும். அப்பொழுதே ஒன்றரை ஆண்டுகாலம் போராடி 1940, பிப்ரவரி 21ம் தேதி கட்டாய இந்தி ஒழிக்கப்பட்டது.

தமிழகத்தில் கட்டாய இந்தி ஒழிக்கப்பட்ட பிப்ரவரி 21 தேதியான அதே நாளில் இன்று உலக தாய்மொழிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.

எனவே, அந்த நாளின்போது இந்த வரலாற்றையும் இணைத்தே நினைவுகூர வேண்டும்.

பிறகு 15 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்டு 1950 அரசியல் சட்டத்தினை நடைமுறைப்படுத்தினர். பிறகுதான் 1965ல் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தது.

மாணவியர்

அந்தந்த மாநில மொழிகள் அந்தந்த மாநிலத்தின் ஆட்சி மொழியாக வேண்டும் என்பதுதான் இன்றைக்கு வேண்டுவது. மத்திய அரசில் இந்தியோடு, ஆங்கிலமும் ஆட்சி மொழியாக இருக்கும் என்று சொல்லப்பட்டது. ஆனால், மத்தியில் உள்ள 97 துறைகளில் வெறும் 16 துறைகளில் மட்டும்தான், இந்தியும் ஆங்கிலமும் உள்ளன. மற்ற துறைகளில் இந்தி மட்டும்தான் உள்ளது.

அதனுடைய வடிவம்தான் மும்மொழிக்கொள்கை. இந்தி மூன்றாவது கட்டாயமொழி என்றனர். அதற்கு எதிர்ப்பு வந்தவுடன் நீங்கள் விரும்பிய மொழியை முன்றாவது மொழியாக கற்றுக்கொள்ளலாம் என்றுவிட்டனர்.

ஆனால், எந்த மொழியினை நாம் விரும்பினாலும், அந்த மொழிப்பாடத்தினை கற்றுத்தர ஆசிரியர் இருப்பாரா? பள்ளியில், எந்த ஆசிரியர் இருக்கிறாரோ அந்த மொழியினை கற்றுக்கொள்ளலாம் என்கிற வடிவில் மீண்டும் இந்தி திணிப்புதான் நடைபெறும். எந்த வடிவத்திலும் மும்மொழி என்பதை ஏற்றுக்கொள்ளக் கூடாது.

அதற்கு இரண்டு காரணம் உண்டு. மொழிகளை மட்டுமே கற்றுக் கொண்டு இருந்தால் மற்ற பாடங்களை படிப்பதற்கான பிரிவுவேளை குறையும். அதற்கான முயற்சி குறையும்.

அதனால் நமக்கு தமிழும், ஆங்கிலமும் போதும். 22 தேசிய மொழிகள் இருக்கிறதல்லவா. அந்தந்த தேசிய மொழிகள் அந்தந்த மாநிலத்தின் பயிற்று மொழியாக இருக்கட்டும்.

ஏன் இந்தியினை எதிர்க்கிறீர்கள் என்று கேட்டால், மொழிகளுக்கு இடையில் சமத்துவம் இருந்தால்தான் மொழி பேசும் மக்களுக்கு இடையில் சமத்துவம் இருக்கும், ஒரு மொழி திணித்தால் எந்த மொழி திணிக்கப்படுகிறதோ அந்த மொழிக்கு உரியவர்கள்தான் எல்லா நிலையிலும் ஆதிக்கத்தில் வருவார்கள்.

எனவே, “இந்தி திணிப்பு என்பது வெறும் மொழியினை பற்றிய செய்தி அல்ல. நம்முடைய சந்தை பறிபோகும், நம்முடைய வேலைவாய்ப்பு பறிபோகும், தொழில் வளர்ச்சி பறிபோகும். எடுத்துக்காட்டாக ஆங்கில ஊடகங்கள் இங்கு தமிழில் வரும்போது நிறைய வேலைவாய்ப்புகள் உருவாகின்றது.

ஆனால், இந்தி மட்டுமே என்றுவிட்டால், ஒரே அலைவரிசை போதும், அவர்கள் மட்டுமே அதிக வேலைவாய்ப்பு பெருகிறவர்களாக ஆவார்கள். இந்தி திணிப்பிற்கு பின்னால் இவ்வளவும் இருக்கின்றன. எனவே எதிர்த்தே தீர வேண்டும்” என்று கூறினார் கவுதமன். -BBC_Tamil

TAGS: