தமிழர்களுக்காகவும் வாதாடிய மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி காலமானார்!

முன்னாள் மத்திய அமைச்சரும், உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞருமான ராம்ஜெத்மலானி, உடல்நலக்குறைவால் டெல்லியில் இன்று காலமானார். அவருக்கு வயது 95.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள ஷிக்கார்பூர் என்ற ஊரில் 1923ஆம் ஆண்டில் செப்டம்பர் 14ஆம் தேதி பிறந்தவர் ராம் பூல்சந்த் ஜெத்மலானி (Ram boolchand jethmalani).

பள்ளிக் கல்வியில் சிறந்து விளங்கிய காரணத்தால், இரு முறை நேரடியாக உயர் வகுப்புகளுக்கு முன்னேற்றம் கண்ட அவர், 17 வயதிலேயே எல்.எல்.பி. பட்டம் பெற்றார். 18 வயதிலேயே வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கிய ராம் ஜெத்மலானி, இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு மும்பையில் குடியேறினார். 1959ஆம் ஆண்டில் மிகவும் பரபரப்பான வழக்குகளில் ஒன்றாக விளங்கிய கடற்படை தளபதி நானாவதி வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞராக வாதம் செய்து கவனம் ஈர்த்தார்.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக வாதாடியது அவரது முக்கிய வழக்குகளில் ஒன்று. அப்சல் குருவின் தூக்கு தண்டனைக்கு எதிராகவும் வாதாடியவர் ராம்ஜெத் மலானி. அத்வானிக்கு எதிரான ஹவாலா பணப்பரிவர்த்தனை வழக்கு, 2ஜி, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக அருண் ஜேட்லி தொடர்ந்த அவதூறு வழக்குகளிலும் வாதாடியவர் ராம் ஜெத்மலானி.

2010ஆம் ஆண்டில் இந்திய பார் கவுன்சிலின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட அவர், பாஜக சார்பில் 6 முறை மாநிலங்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் சட்டத்துறை மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.

95 வயதான ராம்ஜெத்மலானி, வழக்கறிஞர் பணியில் இருந்து 2017ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். மாநிலங்களவை உறுப்பினராக மட்டும் தற்போது பதவி வகித்து வந்த அவர், நாள்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை காலமானார்.

ராம்ஜெத்மலானியின் உடலுக்கு, குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். ராம்ஜெத்மலானி மறைவுக்கு, பிரதமர் நரேந்திரமோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அறிவாற்றலும், துணிச்சலும் மிக்க வழக்கறிஞராகத் திகழ்ந்தவர் என ராம்ஜெத் மலானிக்கு புகழாரம் சூட்டியுள்ளார். லோதி சாலையில் உள்ள மயானத்தில் இன்று மாலை ராம்ஜெத் மலானியின் இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன.

ராம்ஜெத்மலானியின் மறைவுக்கு திமுக, பாமக, மதிமுக ஆகிய கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், நீதிமன்றங்களில் கோடை இடியாக முழங்கியவர் ராம்ஜெத் மலானி எனப் புகழாரம் சூட்டியுள்ளார். எவ்வளவு பெரிய இடத்தில் ஊழல் நடந்தாலும், யார் மூலம் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் வந்தாலும், முதலில் எதிர்த்து நிற்கும் மனவலிமையும், அரிய ஆற்றலும் பெற்றவர் ராம்ஜெத்மலானி என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

ராம்ஜெத்மலானியின் மறைவால் ஜனநாயக காவல் அரண் சாய்ந்து விட்டதாகவும், தனது நெஞ்சில் வேதனை துயர் சூழ்ந்து தாம் நொறுங்கிப் போய் விட்டதாகவும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். சொல்லில் மட்டுமல்லாமல், நெஞ்சில் அஞ்சாத துணிவு மிக்கவர் ராம்ஜெத்மலானி என அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், ஏழைகள் சம்பந்தப்பட்ட வழக்குகளை இலவசமாக நடத்திக் கொடுத்த வரலாறும், பெருமையும் ராம்ஜெத்மலானிக்கு உள்ளதாகக் கூறியுள்ளார்.

டெல்லியில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள ராம்ஜெத்மலானியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து பிரதமர் நரேந்திரமோடி நேரில் அஞ்சலி செலுத்தினார்.

இதேபோல் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ஆகியோரும், ராம்ஜெத்மலானிக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

-https://athirvu.in

TAGS: