காஷ்மீரில் எதிரொலிக்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் ஐ.நா பேச்சு

ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் சபைக் கூட்டத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோர் வெள்ளிக்கிழமை பேசியபின், அந்தப் பேச்சுக்களின் தாக்கம் இந்திய நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரில் எதிரொலிக்கிறது.

இம்ரான் கானின் பேச்சுக்கு பிறகு இந்திய நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரில் அவருக்கு ஆதரவான மனநிலை அங்கு வாழும் மக்களிடையே உருவாகியுள்ளதை உணர முடிகிறது என்கிறார் காஷ்மீரில் உள்ள பிபிசி உருது சேவையின் செய்தியாளர் ரியாஸ் மஸ்ரூர்.

இம்ரான் கான் காஷ்மீர் குறித்துப் பேசிய விவகாரங்களுக்கு ஆதரவாக அங்கு பேரணிகளும் ஊர்வலங்களும் நடத்த நேற்று சனிக்கிழமை, காஷ்மீரின் பல இடங்களில் முயற்சிகள் நடந்தன. ஆனால், அவற்றைத் தடுக்க பாதுகாப்பு படையினர் தடுக்க முயன்றதால் இரு தரப்புக்கும் இடையே மோதல் உண்டானது. எனினும், இந்த மோதல்களில் பொதுமக்கள் யாருக்கும் உயிராபத்தை ஏற்படுத்தும் அளவுக்கு பாதிப்புகள் இல்லை.

காவல் துறையுடன் மோதலில் ஈடுபட்டவர்களில் எட்டு பேர் ராம்பனில் கைது செய்யப்பட்டனர்.

நரேந்திர மோதி காஷ்மீர் விவகாரம் குறித்து எதையும் பேசவில்லை. அவர் பெரும்பாலும் தனது அரசு செய்துள்ள சாதனைகள் என்று தாம் கருதும் விவகாரங்கள் பற்றியே பேசினார்.

ஆனால், இம்ரான் கானின் பேச்சு முழுவதும் காஷ்மீர் பிரச்சனையை மையப்படுத்தியே இருந்தது.

இதனிடையே, சனிக்கிழமை ஜம்மு – காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச்சூட்டில் அந்த அமைப்பைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்டிருப்பதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

பிணைக்கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருந்த நபர் மீட்கப்பட்ட இந்த சம்பவத்தில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார்.

கொல்லப்பட்ட மூவரில் ஒசாமா எனும் நபர் இதற்கு முன் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஒருவர் மற்றும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி ஒருவரின் கொலையில் தொடர்புடையவர் என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். -BBC_Tamil

TAGS: