நிடி ஆயோக் வெளியிட்டுள்ள 2016-2017ஆம் கல்வியாண்டுக்கான தேசிய அளவிலான பள்ளிக் கல்வித் தரவரிசைப் பட்டியலில் கேரள மாநிலம் முதலிடத்தையும், தமிழகம் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன என்கிறது தினமணி செய்தி.
அதே வேளையில் உத்தரப் பிரதேசம், பிகார், ஜார்க்கண்ட ஆகிய மாநிலங்கள் கடைசி மூன்று இடங்களில் உள்ளன. நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலங்களின் கல்வித் தரத்தை பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆய்வு செய்து நிடி ஆயோக் வகைப்படுத்தியுள்ளது.
ஆசிரியர் – மாணவர் விகிதம், மாணவர்களின் தேர்ச்சி விகிதம், பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதி, நிதிகளை திறம் பட கையாளுதல் உள்ளிட்ட 44 காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
நிடி ஆயோக் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள பள்ளி கல்வியின் தர வரிசை பட்டியலில் நாடு முழுவதும் பெரும் வேறுபாடுகள் இருப்பது தெரியவந்துள்ளது.
பள்ளிக் கல்வியின் தரத்தில் ஒட்டுமொத்த செயல்திறன் மதிப்பெண் பட்டியலில் 20 பெரிய மாநிலங்களில், கேரளம் 76.6 சதவீத மதிப்பெண்ணுடன் முதல் இடத்திலும், உத்தரப்பிரதேசம் 36.4 சதவீத மதிப்பெண்களுடன் கடைசி இடத்திலும் உள்ளன. தமிழகம் 73.4 சதவீதத்துடன் 2ஆவது இடத்தில் உள்ளது.
-தினமணி