அடுப்பில் கொதிக்கும் பாலில் ஆவி பறக்கிறது. காற்றில் தேனீரின் மனம் கமழ்கிறது. சிறு நகர தேனீர்க் கடைகளுக்கே உரிய முறையில் முந்தைய நாள் தூக்கத்தை முகத்தில் மிச்சம் வைத்துக் கொண்டு ஒரு கூட்டம் தேனீரை உறிஞ்சிக் கொண்டிருக்கிறது.
விழுப்புரம் மந்தக்கரையில் இருக்கிறது அந்த தேனீர்க் கடை. மக்கள் கூடுகிற பழைய நகரின் பிரபலமான திடல் அது.
தாள லயத்துக்கு ஆடுகிற நடனக் கலைஞரைப் போல தேனீரை ஆற்றிக்கொண்டிருக்கிறார் பெரியவர் சுப்ரமணியன்.
ராவணன் தேனீர்க் கடைக்கு இதோ புதிதாக ஒரு வாடிக்கையாளர் வருகிறார்.
“ஐயா உங்களுக்கு குளம்பியா, தேனீரா,” கனீரெனக் கேட்கிறார் சுப்ரமணியன்.
வந்தவர் குழம்பவில்லை. அவர் ராவணன் தேனீர்க் கடையையும், சுப்ரமணியனையும் நன்கு தெரியும்.
தேனீர் என்றால் டீ என்றும், குளம்பி என்றால் காஃபி என்றும்கூட அவருக்குத் தெரிந்திருக்கிறது.
ஆனால், “ஒரு டீ” என்கிறார்.
பிற மொழி கலவாமல் தனித் தமிழில்தான் பேசவேண்டும் என்று தளராத பற்று கொண்ட டீக்கடைக்காரர் சுப்ரமணியன் அசரவில்லை.
“உங்களுக்கு வன் தேனீரா மென் தேனீரா” என்கிறார்.
லைட் டீ என்பதை மென் தேனீர் என்றும், ஸ்டிராங் டீ என்பதை வன் தேனீர் என்றும் தமிழாக்கி மட்டுமே பயன்படுத்துவார். பால் டீ என்றால் வெண் தேனீர். டிக்காஷன் என்பதை கடுந்தேனீர் என்பார்.
எப்படி வந்தது தனித்தமிழ் ஆர்வம்?
தமிழை ஆழமாகக் கற்ற புலவராக இருப்பாரோ சுப்ரமணியன்.
இதோ அவரிடமே கேட்போம்.
“ஏன் தனித் தமிழில் மட்டுமே பேசுகிறீர்கள்? என்ன படித்திருக்கிறீர்கள்?”
“கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள ஆலடி என்பதுதான் நான் பிறந்த ஊர். 4-ம் வகுப்பு வரைதான் படித்திருக்கிறேன். பிபிசி தமிழோசை வானொலி, இலங்கை வானொலி, முரசொலி ஆகியவற்றை கேட்டும் படித்தும்தான் இப்படிப் பேசவேண்டும் என்ற எண்ணம் வந்தது,” என்கிறார் சுப்ரமணி.
தற்போது 69 வயதாகிறது இவருக்கு.
“தனித்தமிழில் பேசவேண்டும் என்று ஏன் நினைத்தீர்கள்?” என்று கேட்டோம்.
“பிற மொழிச் சொற்களை புகுத்தி, புகுத்தி தமிழே அழிகிறது. பழமையான நம் தமிழ்மொழியை அழிய விடக்கூடாது என்று எண்ணம் வந்தது. எனக்கு அதிகம் தெரியாது. தெரிந்த சொற்களை பிறருக்கும் கொண்டு செல்லவேண்டும் என்று நினைத்தேன். அப்படித்தான் என்னால் முடிந்த வரை இந்தப் பணியை செய்கிறேன்” என்கிறார் சுத்தமான தமிழில்.
“வேறு என்ன தனித்தமிழ் சொற்களை பயன்படுத்துவீர்கள்” என்று கேட்டோம்.
“ஆட்டோவை தானியுந்து என்பேன். லாரியை சரக்குந்து என்பேன். ஹெலிகாப்டர் என்பது உலங்குந்து. கார் என்பது மகிழுந்து. அமாவாசை என்பதை மறைமதி என்றும், பௌர்ணமியை முழுமதி என்றும் அழைப்பேன்,” என்கிறார்.
இவர் பயன்படுத்துகிற தமிழ் வாடிக்கையாளர்களுக்குப் புரிகிறதா என்று கேட்டபோது இந்த கடையின் வாடிக்கையாளரும், நகைக் கலைஞருமான உமாபதி “வழக்கமான வாடிக்கையாளர்களுக்குப் புரியும். புதிதாக வருகிறவர்களுக்குப் புரியாவிட்டால், அருகில் இருப்பவர்கள் எடுத்துச் சொல்வார்கள். தேவைப்பட்டால் அவரே விளக்குவார்” என்கிறார். -BBC_Tamil