காஷ்மீர் குறித்த மலேசிய பிரதமரின் ஐ.நா பேச்சுக்கு இந்தியா கடும் எதிர்வினை

காஷ்மீர் இந்தியாவால் வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என மலேசியப் பிரதமர் மகாதீர் மொஹமத் பேசியதற்கு இந்தியா எதிர்வினையாற்றியுள்ளது.

இருநாடுகள் இடையே இருக்கும் நட்புறவைக் கருத்தில் கொண்டு இதுபோன்ற கருத்துகளை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று இந்தியா தெரிவித்துள்ளது.

காஷ்மீர் விவகாரம் தொடர்பான ஐ.நாவின் தீர்மானம் உள்ள போதிலும், அப்பகுதி வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்று மகாதீர் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் 74ஆவது பொதுச்சபைக் கூட்டத்தில் பேசியிருந்தார்.

பிற சமஸ்தானகளைப் போலவே காஷ்மீரும் இணைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபின்னரே இந்தியாவுடன் இணைந்தது; பாகிஸ்தான் சட்டவிரோதமாகப் படையெடுத்து ஜம்மு – காஷ்மீரின் பகுதிகளை ஆக்கிரமித்துக்கொண்டது என இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

இந்திய வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் இன்று டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்.

அமைதியான வழிமுறைகளின் மூலம் காஷ்மீர் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்று ஐ.நாவில் குறிப்பிட்ட மகாதீர், இல்லையெனில் ஐநாவின் கோரிக்கைகளைப் புறக்கணிப்பது என்பது சட்ட நீதியைப் புறக்கணிப்பதற்கு ஒப்பானது என்றார்.

துருக்கி அரசும் காஷ்மீர் பிரச்சனையை அப்போது ஐ.நாவில் எழுப்பியிருந்தது.

துருக்கி அரசு முழுக்க முழுக்க இந்தியாவின் உள்நாட்டு விவகாரமான காஷ்மீர் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் முன், அவர்களிடம் கள நிலவரம் என்ன என்பதை எடுத்துரைப்போம் என்று ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இம்ரான் கான் மீது கடும் விமர்சனம்

united nationsபடத்தின் காப்புரிமைUNITED NATIONS

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டுக்கு வருமாறு அந்நாட்டு மக்களுக்கு அறைகூவல் விடுத்தது குறித்து விமர்சனம் செய்த ரவீஷ் குமார், இம்ரான் கான் ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் மக்களைத் தூண்டும் விதத்தில் பொறுப்பற்ற கருத்துகளை வெளியிட்டார் என்று கூறினார்.

“இம்ரான் கானுக்கு சர்வதேச உறவுகளை எவ்வாறு மேற்கொள்வது என்று தெரியவில்லை. அவர் இந்தியாவுக்கு எதிரான ஜிகாத்துக்கு அழைப்பு விடுத்தார். அது அவர்களுக்கு இயல்பானதுதான்,” என்றார் ரவீஷ் குமார். -BBC_Tamil

TAGS: