ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு உதவுவதற்காக எல்லை தாண்டிச் செல்ல வேண்டாம் என பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களுக்கு அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான், எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான், இந்தியாவுடனான தூதரக ரீதியிலான உறவுகளை முறித்துக் கொண்டது. மேலும் இவ்விவகாரம் தொடர்பாக சர்வதேச நாடுகளின் ஆதரவையும் திரட்ட முயன்று தோல்வியை தழுவியது. இந்நிலையில் ஜம்மு – காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் வாகனப் பேரணியில் ஈடுபட்டனர்.
ஜம்மு – காஷ்மீர் விடுதலை முன்னணி என்ற அமைப்பின் சார்பில் முசாபராபாத் வரை இந்த பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை சுட்டிக் காட்டி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள இம்ரான் கான், சக காஷ்மீரி என்ற உணர்வின் பேரில் ஜம்மு – காஷ்மீர் மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவுவதற்காகவோ அல்லது ஆதரவு தெரிவிப்பதற்காகவோ எல்லை தாண்ட வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அவ்வாறு எல்லை தாண்டினால் அது இந்தியாவுக்கு சாதகமாக மாறிவிடும் எனவும் இம்ரான்கான் எச்சரித்துள்ளார்.
-athirvu.in