ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்: “கும்பல் கொலை நாட்டின் பெயரை கெடுக்கப் பயன்படுத்தப்படுகிறது”

’கும்பல்கொலை’ என்பது இந்தியாவுக்கு அன்னியமான ஒன்று என்று தெரிவித்துள்ளார் ஆர்.எஸ்.எஸ். எனப்படும் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங் தலைவர் மோகன் பாகவத்.

தசராவை ஒட்டி ஆர்.எஸ்.எஸ். தலைமையிடம் அமைந்துள்ள நாக்பூரில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பேசிய மோகன் பாகவத், சில வன்முறை சம்பவங்களை கும்பல் கொலை என்று கூறி இந்தியாவின் பெயரையும், இந்து சமூகத்தின் பெயரையும் கெடுக்க பார்க்கின்றனர்.

கும்பல் கொலை என்பது இந்தியாவுக்கு அன்னியமான ஒன்று, அது எங்கிருந்தோ வந்த ஒன்று என்று தெரிவித்துள்ளார்.

பன்முகத்தன்மை என்பது “நம் நாட்டின் உள்ளார்ந்த வலிமை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“சாதி, சமயம், மொழி, இனம் ஆகியவை மக்களைப் பிரிக்கவே பயன்படுத்தப்படுகின்றன.”

“எனவே இம்மாதிரியான பிரிக்கும் முயற்சிகளை நாம் கண்டறிந்து அறிவுசார் முறையில் அதை எதிர்கொள்ள வேண்டும்.”

“அரசமைப்புக்குள் இந்த சமுதாயம் செயல்பட வேண்டும்”.

“பலதரப்பட்ட எண்ணங்கள் எழலாம். வன்முறையை தூண்டும் விதமாக பல சம்பவங்கள் நடைபெறலாம். இருப்பினும் இந்த சமூகம் அரசமைப்புக்கு உட்பட்டே நடந்து கொள்ள வேண்டும்.”

“சமூகத்தில் உள்ள பலதரப்பட்ட மக்கள் நல்ல எண்ணங்கள் மற்றும் ஒற்றுமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த மோகன் பாகவத், இந்தியாவில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு, மக்களின் ஆசையையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றும் தைரியம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

2019ஆம் ஆண்டு மோதி அரசை மீண்டும் தேர்வு செய்தது மூலம் அந்த அரசின் கடந்த கால செயல்பாட்டை மக்கள் ஆதரிக்கின்றனர் என்று பொருள் என்று கூறிய அவர் மக்கள் எதிர்காலம் குறித்து பல எதிர்பார்ப்புகளை வைத்து இந்த அரசை தேர்வு செய்துள்ளனர் என்றும் தெரிவித்தார். -BBC_Tamil

TAGS: