காஷ்மீர் குறித்து சீன அதிபர் ஷி ஜின்பிங் கூறிய கருத்தும், இந்தியாவின் எதிர்ப்பும்

தனது அதிகாரப்பூர்வ உரிமைகளை பாதுகாக்க பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவு தெரிவிக்கும் என்றும், காஷ்மீர் விவகாரத்தை இருநாடுகளும் அமைதியான பேச்சுவார்த்தையின் மூலம் தீர்த்துக் கொள்வர் என்றும் நம்புவதாக சீனா தெரிவித்துள்ளது.

அக்டோபர் 8-9 ஆகிய தேதிகளில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார். அவர் பிரதமராக பதவியேற்ற காலத்திலிருந்து சீனாவுக்கு மேற்கொள்ளும் மூன்றாவது பயணம் இது.

பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் தங்களின் நட்புறவு குறித்து எப்போதுமே பெருமை கொள்வதுண்டு. அது இமாலய மலையைக் காட்டிலும் பெரியது என்றும், தேனைவிட இனிப்பானது என்றும் அவர்கள் கூறுவது உண்டு.

தனது சீன பயணத்தின்போது இம்ரான் கான் காஷ்மீர் விவகாரம் குறித்து ஷி ஜின்பிங்கிடம் பேசியுள்ளார்.

“பிரதமர் இம்ரான் கான் காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானின் கவலைகள், நிலைபாடு மற்றும் தற்போதுள்ள அவசர பிரச்சனைகள் குறித்து பேசினார். அதற்கு பதிலளித்த சீன அதிபர், காஷ்மீர் விவகாரத்தை தாங்கள் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், காஷ்மீர் விவகாரத்தில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்கள்படியும், இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்குள் ஏற்பட்ட ஒப்பந்தங்கள் படியும் அமைதியாகவும் முறையாகவும் தீர்க்கப்பட வேண்டும்.

அந்த சூழலை மேலும் கடினமாக்கும் ஒரு தரப்பு நடவடிக்கைகளை சீனா எதிர்கிறது” என சீன அதிபர் தெரிவித்ததாக சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளும் வெளியிட்ட கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்ரான் கான்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

“பாகிஸ்தான் தனது அதிகாரப்பூர்வ உரிமைகளை பாதுகாக்க சீனா ஆதரவு தெரிவிக்கும் என்றும், காஷ்மீர் விவகாரத்தை இருநாடுகளும் அமைதியான பேச்சுவார்த்தையின் மூலம் தீர்த்துக் கொள்ளவர் என்று நம்புவதாகவும் ஷி ஜின்பிங் தெரிவித்தார்.” என சீனாவின் அதிகாரப்பூர்வ செய்தி முகமையான ஷின்ஷுவாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பதில்

பாகிஸ்தான் மற்றும் சீனா கூட்டாக வெளியிட்ட அறிக்கை தொடர்பாக கருத்து தெரிவித்த இந்திய வெளியுறவு துறையின் செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார், ‘இந்தியாவின் நிலைப்பாடு எப்போதும் ஒன்றுதான், ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒரு முக்கிய பகுதி. இந்தியாவின் நிலை குறித்து சீனாவுக்கு நன்கு தெரியும். இந்தியாவின் உள்விவகாரங்கள் குறித்து பிற நாடுகள் கருத்து தெரிவிக்க வேண்டாம்’ என தெரிவித்துள்ளார்.

மோதி – ஷி ஜின்பிங்பேச்சுவார்த்தை

மாமல்லபுரம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்த நிலையில் அக்டோபர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் சீன அதிபர் ஷி ஜின்பிங் தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்துக்கு பயணம் மேற்கொள்கிறார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சீனாவுக்கு பயணம் செய்த இந்திய பிரதமர் நரேந்திர மோதி, சீன அதிபரைச் சந்தித்தார். அப்போது இந்தியா வர ஷி ஜின்-பிங்குக்கு அழைப்பு விடுத்தார் மோதி.

இந்த அழைப்பை ஏற்று இந்தியா வரும் ஜின் பிங், அக்டோபர் 11 மற்றும் 12 ஆகிய இருநாட்கள் சென்னைக்கு வருகிறார்.

இது நட்புமுறையிலான சந்திப்பாகும்.

இந்தப் பேச்சு வார்த்தையின்போது என்னென்ன விவகாரங்கள் விவாதிக்கப்படுமென அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இருந்தபோதும் இந்தியா – சீனா இடையிலான கட்டுப்பாட்டுக் கோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைச் சரிசெய்வது ஆகியவை குறித்து பேசப்படக்கூடும். இவை தவிர, காஷ்மீர் விவகாரம், சீனா – பாகிஸ்தான் பொருளாதார இணைப்புச் சாலை ஆகியவை குறித்தும் இரு நாடுகளும் பேசக்கூடும்.

எனவே சீன அதிபரின் இந்திய பயணத்தால், இம்ரான் கானின் சீன பயணம் பெரிதும் கவனிக்கப்பட்டது.

-BBC_Tamil

TAGS: