பட்டாசு விபத்து: நாடு முழுவதும் 5 பேர் பலி; 44 பேர் காயம்

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் பட்டாசு விபத்தில் சிக்கி 5 பேர் பலியாகி உள்ளனர்.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று உற்சாகமுடன் கொண்டாடப்பட்டது.  நாட்டு மக்கள் அதிகாலையில் குளித்து, சாமி கும்பிட்டு, புது ஆடைகளை உடுத்தி பலகாரங்களை பகிர்ந்து உண்டனர்.

தீபாவளி பண்டிகையின் முக்கிய அம்சம் என கூறப்படும் பட்டாசு வெடிப்பதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வித்தியாசமின்றி அனைவரும் ஆர்வமுடன் இருந்தனர்.

பசுமை பட்டாசுகள்

இந்த முறை சுற்றுச்சூழலுக்கு அதிக அளவு பாதிப்பு ஏற்படுத்துவதில்லை என்ற வகையில் பசுமை பட்டாசுகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.  இவற்றை மக்கள் விரும்பி வாங்கி சென்று வெடித்தனர்.

எனினும், சில இடங்களில் சரியாக விதிகளை பின்பற்றாமல் பட்டாசுகளை வெடித்ததில் பல்வேறு தீக்காய சம்பவங்கள் நடந்தன.

அறுவை சிகிச்சை

அந்த வகையில் தெலுங்கானாவில் நேற்று பட்டாசு வெடித்ததில் 44 பேருக்கு கண்களில் காயம் ஏற்பட்டது.  அவர்கள் சரோஜினி தேவி கண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

அவர்களில் 7 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.  அந்த 7 பேரில் 3 பேருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.  மற்ற 4 பேருக்கு ஸ்கேனிங் உள்ளிட்ட பரிசோதனைகள் நடத்திய பின்பே அறுவை சிகிச்சை செய்வது பற்றி முடிவு செய்யப்படும் என அதிகாரி கூறினார்.

புஸ்வாணம் வெடித்தது

இதேபோன்று மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் பட்டாசுகள் வெடித்ததில் 5 வயது சிறுவன் உள்பட 2 பேர் வெவ்வேறு சம்பவங்களில் உயிரிழந்தனர்.

அந்நகரின் தெற்கே ஹரிதேவ்பூர் பகுதியில் புஸ்வாணம் வெடித்ததில் ஆதி தாஸ் என்ற சிறுவன் பலியானான்.  இதேபோன்று நகரின் கிழக்கே கஸ்பா பகுதியில் தீப் குமார் கோலே (வயது 40) என்பவர் புஸ்வாணம் வெடித்ததில் பலியாகி உள்ளார்.

விசாரணைக்கு மம்தா உத்தரவு

இவர்கள் இருவருக்கும் பட்டாசுகளின் வெடி சிதறல்கள் கழுத்தில் பட்டு காயங்கள் ஏற்பட்டு உள்ளன.  அவர்கள் வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.  எனினும் இருவரும் உயிரிழந்து விட்டனர்.  அதிக ரத்த இழப்பினால் அவர்கள் உயிரிழந்து உள்ளனர் என்று மருத்துவ அதிகாரி கூறியுள்ளார்.

இதில், கோலேவின் இரு சகோதரர்களை முதல் மந்திரி மம்தா பானர்ஜி தொடர்பு கொண்டு நலம் விசாரித்து உள்ளார்.  இந்த விவகாரங்கள் பற்றி விசாரணை மேற்கொண்டு விரிவான அறிக்கை அளிக்கும்படி பானர்ஜி காவல் ஆணையர் அனுஜ் சர்மாவிடம் கேட்டு உள்ளார்.

245 தொலைபேசி அழைப்புகள்

டெல்லியில் பட்டாசுகள் வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவங்கள் உள்பட 200க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் டெல்லி தீயணைப்பு துறைக்கு வந்துள்ளன.

இதுபற்றி தீயணைப்பு துறை வெளியிட்டுள்ள தகவலில், நேற்றிரவு வரை 245 தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன.  இவற்றில் திறந்த வெளியில் ஏற்பட்ட பட்டாசு விபத்துகள் தொடர்புடைய சம்பவங்களே பெருமளவில் உள்ளன.  இதேபோன்று இன்று காலை வரை கூடுதலாக 96 தொலைபேசி அழைப்புகளும் வந்துள்ளன.

இதற்கு முந்தைய வருடங்களில் ஒப்பிடும்பொழுது, பட்டாசுகள் கொளுத்தும் பொழுது அல்லது வெடிக்கும் பொழுது ஏற்பட்ட தீ விபத்து சம்பவங்கள் இந்த வருடம் குறைந்துள்ளன என்றும் தீயணைப்பு துறை தெரிவித்து உள்ளது.

விதி மீறல்கள்

எனினும் மாசு மற்றும் பட்டாசுகள் விற்பனை மற்றும் பயன்பாடு ஆகியவற்றிற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஆகியவற்றால் டெல்லியில் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகள் வெடிப்பது குறைந்து உள்ளது.

டெல்லியின் பல்வேறு பகுதிகளில் விதிகளை மீறி 10 மணிக்கு மேல் குறைந்தது நள்ளிரவு வரை பட்டாசுகள் வெடித்த சம்பவங்களும் நடந்தேறியுள்ளன.

12 தீயணைப்பு வாகனங்கள்

டெல்லி சதர் பஜார் சந்தை பகுதியில் உள்ள கடை ஒன்றில் பெரிய அளவில் தீ விபத்து ஒன்றும் ஏற்பட்டு உள்ளது.  கட்டிடம் ஒன்றில் 4வது மற்றும் 5வது தளத்தில் அமைந்த கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்கிருந்த பிளாஸ்டிக் பொம்மைகள் உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்தன.  12 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஏறக்குறைய ஒன்றரை மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளன.

இதேபோன்று மற்றொரு சம்பவத்தில் டெல்லி ஜகத்புரி பகுதியில் வீட்டின் குளியலறை மற்றும் கழிவறைக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்யும் கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தினை அடுத்து 6 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஒரு மணிநேரம்  போராடி தீயை கட்டுப்படுத்தின.  இந்த சம்பவங்களில் யாருக்கும் காயமோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை.

கடந்த வருடம் பட்டாசு விற்பனைக்கு தடை இருந்தபொழுதும் தீ விபத்து தொடர்புடைய 271 தொலைபேசி அழைப்புகள் வந்தன என்று தீயணைப்பு துறை தெரிவித்து உள்ளது.

3 பேர் பலி

சத்தீஷ்காரின் கொண்டகாவன் மாவட்டத்தில் மக்டி கிராமத்தில் காஷி சென் என்பவர் மளிகை கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார்.  இவர் பட்டாசுகளை விற்பதற்கும் உரிமம் பெற்றுள்ளார்.  இதனை அடுத்து விற்பனைக்காக பட்டாசுகளை வாங்கி கடையில் வைத்துள்ளார்.

அதிகளவில் கூட்டம் குவிந்த நிலையில், சென்னின் நண்பர்கள் பல்ராம் நேதம் மற்றும் சிவலால் ஸ்ரீமாலி ஆகிய 2 பேர் பட்டாசு விற்பனைக்கு உதவியாக இருந்துள்ளனர்.  நள்ளிரவு 11.30 மணி வரை 3 பேரும் பட்டாசுகளை கிராமத்தினருக்கு விற்றுள்ளனர்.  இதன்பின் 3 பேரும் கடையை மூடி விட்டு உள்ளே இருந்துள்ளனர்.

இந்நிலையில், திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் முழு கடையும் எரிந்து விட்டது.  கடைக்குள் இருந்த மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளனர்.  இதுபற்றி தகவல் அறிந்து போலீசார் உடனடியாக சென்றனர்.  உள்ளூர்வாசிகளின் உதவியுடன் தீ அணைக்கப்பட்டது.  தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் பற்றி உறுதி செய்வதற்காக தடயவியல் நிபுணர்கள் குழு ஒன்று இன்று காலை அந்த பகுதிக்கு சென்றுள்ளது.

பட்டாசுகள் தவிர்த்து வேறு சில காரணிகளால் தீ விபத்துகள் ஏற்பட்டு உள்ளன.

தீ விபத்து

ஒடிசாவின் சம்பல்பூர் நகரில் கோல்பஜார் பகுதியில் காய்கறி சந்தை ஒன்று உள்ளது.  இங்கு நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் 70க்கும் கூடுதலான கடைகள் எரிந்து போயுள்ளன.  தீயணைப்பு வாகனங்கள் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்று 2 மணிநேர போராட்டத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தன.

சந்தையில் நடந்த பூஜைக்கு பின் அதிகாலை 2.30 மணியளவில் விளக்கு ஒன்று சரிந்து விழுந்ததில் தீ விபத்து ஏற்பட்டு இருக்க கூடும் என நம்பப்படுகிறது.  இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.  அதன்பின்பே தீ விபத்திற்கான முழு காரணம் நமக்கு தெரிய வரும் என்று உதவி தீயணைப்பு அதிகாரி ஜிதேந்திரா கூறியுள்ளார்.

ரூ.50 லட்சம் இழப்பு

இதுபோன்று மத்திய பிரதேசத்தில் மற்றொரு சம்பவத்தில் 3 தளங்கள் கொண்ட கட்டிடம் ஒன்றில் பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது.  இதில் அங்கிருந்த துணி கடை மற்றும் குடியிருப்பு ஆகியவை தீப்பிடித்து எரிந்தது.  இதில் கடையில் இருந்த துணிகள் எரிந்து விட்டன.  கடை உரிமையாளரான கிர்தாரி கோயல் (வயது 50) என்பவர் காயமடைந்து உள்ளார்.

5 தீயணைப்பு வாகனங்கள் போராடி 6 மணிநேரத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளன.  இதில் ரூ.50 லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து போயுள்ளன என முதற்கட்டத்தில் கிடைத்த தகவல் தெரிவிக்கின்றது.