சிறு வயதிலேயே தாயை இழந்த நாயகி வெண்பா, தந்தை ஆடுகளம் நரேன் அரவணைப்பில் வளர்கிறார். நன்றாக படித்து டாக்டராக வேண்டும் என்ற கனவோடு இருக்கிறார் வெண்பா. பிளஸ் 2 படிக்கும் வெண்பாவிற்கு ஆட்டோ டிரைவராக வருகிறார் நாயகன் அபி சரவணன். இந்நிலையில், காதல் பிரச்சனையில் ஒருவர் வெண்பா மீது ஆசிட் வீச வருகிறார். இதிலிருந்து வெண்பாவை அபி சரவணன் காப்பாற்ற, இருவருக்கும் காதல் ஏற்படுகிறது.
இந்த காதல் வெண்பாவின் படிப்பிற்கு தடையாக அமைகிறது. பல காதல் தோல்விகளை சந்தித்த அபி சரவணன் இந்த காதலாவது நிலைக்க வேண்டும் என்பதற்காக வெண்பாவை உடனே திருமணம் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இறுதியில் வெண்பாவின் டாக்டர் கனவு நிறைவேறியதா? அபி சரவணன், வெண்பா இருவரும் திருமணம் செய்து கொண்டார்களா? இவர்களின் காதல் விஷயம் வெண்பாவின் தந்தை ஆடுகளம் நரேனுக்கு தெரிந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் அபி சரவணன், ஹீரோவாக இருந்தாலும் நாயகியின் வாழ்க்கைக்கு வில்லனாக அமைந்திருக்கிறார். ஆட்டோ டிரைவராக நடிப்பில் கவனிக்க வைக்கிறார். படத்திற்கு பெரிய பலம் நாயகி வெண்பாவின் நடிப்பு. முழு கதையையும் தன் தோளில் தாங்கி செல்கிறார். அபி சரவணனின் காதல், அப்பாவின் பாசம், டாக்டராக வேண்டும் என்ற கனவு என நடிப்பில் பளிச்சிடுகிறார்.
அபி சரவணனின் நண்பராக வரும் அப்புக்குட்டி, வெண்பாவின் தந்தையாக வரும் ஆடுகளம் நரேன் ஆகியோர் அனுபவ நடிப்பால் கைத்தட்டல் பெற்றிருக்கிறார்கள்.
மருத்துவரான அசோக் தியாகராஜன், சினிமா மீது உள்ள காதலால் இப்படத்தை இயக்கி இருக்கிறார். படிப்பில் சிறந்து விளங்கும் பெண்ணின் வாழ்க்கையில் காதல் நுழைந்தால் அவர்களின் எதிர்காலம் எப்படி செல்லும் என்பதை அழகாக சொல்லியிருக்கிறார். முதல் படம் என்று தெரியாத அளவிற்கு படத்தை கொடுத்திருக்கிறார். படத்தின் நீளத்தை குறைத்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.
இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். ஸ்ரீனிவாசின் ஒளிப்பதிவோடு சேர்ந்து பார்க்கும் போது கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.
‘மாயநதி’ தெளிந்த நீரோட்டம்.