சுமார் 380 கிலோமீட்டர் நீளமுள்ள இந்தியாவின் முக்கியமான நதிகளில் ஒன்றான புர்ஹி திஹிங் நதி கடந்த மூன்று நாட்களாக தீப்பிடித்து எரிந்து வருகிறது.
அசாம் மாநிலத்தின் மிகமுக்கிய நீராதாரங்களில் ஒன்றான புர்ஹி திஹிங் நதி, பிரம்மபுத்திரா நதியிலிருந்து உருவாகி அசாம் மாநிலத்தில் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணித்து அம்மாநில விவசாய தேவைக்கான முக்கிய ஆதாரமாக உள்ளது. இந்நிலையில் இந்த நதியில் எரிபொருள் கலந்ததால் கடந்த மூன்று நாட்களாக தீப்பிடித்து எரிந்து வருகிறது.
அசாம் மாநிலத்தின் திப்ருகார் மாவட்டத்தில் உள்ள சசோனி கிராமத்திற்கு அருகில் இந்திய அரசுக்கு சொந்தமான ‘ஆயில் இந்தியா’ எண்ணெய் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் எண்ணெய் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக நதியில் கச்சா எண்ணெய் கலந்துள்ளது. இந்த எண்ணெய் தீப்பிடித்து கடந்த மூன்று நாட்களாக எரிந்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
மூன்று நாட்களுக்கு முன்பே ஆற்றில் ஏற்பட்ட தீ விபத்தை கவனித்த கிராமவாசிகள் உள்ளூர் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தும், இதுவரை அதனை அணைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர். மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக பயன்படும் இந்த நதியில் கச்சா எண்ணெய் கலந்து தீப்பிடித்து எரிந்து வருவது அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.