மாணவர்கள் குறைந்த தமிழ்ப்பள்ளியைக் கெட்டிக்கார மாணவர் தங்கிப் படிக்கும் பள்ளியாக மாற்றினால் என்ன?

இரா குமரன் வேலு | நமது கல்விமுறையில் பல்வேறு வகையான பள்ளிகள் இருக்கின்றன. மொழிவாரியாக தேசியமொழி, சீனமொழி, மற்றும் தமிழ்மொழித் தொடக்கப் பள்ளிகள், மழலையர்ப் பள்ளிகள் இருக்கின்றன.

அரசாங்க இடைநிலைப் பள்ளிகளில் கூட, தங்கிப்படிக்கும் பள்ளிகளான முழு உறைவிடப் பள்ளிகள் (Sekolah Berasrama Penuh), அன்றாடப் பள்ளிகள் (Sekolah Menengah Harian), சீன இடைநிலைப் பள்ளிகள் (SMJKC), கூட்டரசு சமயப் பள்ளிகள் (Sekolah Agama Persekutuan) போன்றவை இருக்கின்றன. இவ்வகைப் பள்ளிகள் தேவைகளின் அடிப்படையில் நிறுவப்பட்டுள்ளன.

நாட்டின் பூமிபுத்திரா வகை ஏழை மாணவர்கள் அறிவியல் கல்வியைப் பெற்று, பொருளாதாரத்தில் உயர வேண்டும் என முழு உறைவிடப் பள்ளிகள் உருவாக்கப்பட்டன. இவ்வகைப் பள்ளிகள், தொடக்கத்தில் புறநகர்ப் பகுதி பூமிபுத்திரா ஏழை மாணவர்களைக் குறிக்கோளாய்க் கொண்டு கட்டப்பட்டன. இன்று பலரும் நகர்ப்பகுதிகளுக்குப் புலம்பெயர்ந்துவிட்ட நிலையில், வசதியான குடும்பத்தில் பிறந்த மாணவர்களும் இங்குத் தங்கிப் படிக்கின்றனர்.

தமிழ்ப்பள்ளியில் அல்லது சீனப்பள்ளியில் படித்த மாணவர்களுக்கு இங்கு முதல் படிவத்தில் சேர்ந்து படிக்க அனுமதி இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம் (தேசிய ஒற்றுமை பற்றி கவலைப்படுபவர்கள் இதைப்பற்றி சிந்திக்கலாம்).

ஆனால், தேசியப் பள்ளியில் படித்த இந்திய, சீன மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதன் பொருட்டும், சிலர் தேசியப் பள்ளிகளுக்குப் பிள்ளைகளை அனுப்புவதுமுண்டு.

மிகச்சிறந்த அறிவாற்றல்மிகுந்த (Gifted Children) குழந்தைகள் படிக்கவும் நமது அரசாங்கம் ‘பெர்மாத்தா’ பள்ளிகளை (Sekolah Permata) அமைத்திருக்கிறது. இங்குத் தேர்தெடுக்கப்பட்ட பிள்ளைகள் மட்டுமே படிக்க முடியும். அரசாங்கத்தின் முழுச்செலவில் நடத்தப்படும் பள்ளி இது. மலேசிய தேசியப் பல்கலைக்கழகத்தின் (UKM) வளாகத்தில் இந்தப் பள்ளி அமைந்துள்ளது. இவர்களின் பாடத்திட்டம் எதிர்காலவியல் அடிப்படையில் ஏற்படுத்தப் பட்டுள்ளது.

6-ஆம் வகுப்பில் படிக்கும் நம் மாணவர்களுக்கும் பெர்மாத்தா மாணவர்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது. பெர்மாத்தாவில் படித்த மாணவர்கள் 16 வயதில் பல்கலைக்கழக அறிமுக வகுப்பில் படிப்பார்கள். இந்த வாய்ப்பெல்லாம் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்குக் கிடைக்கிறதா என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.

ஜனநாயக நாட்டில் பலதரப்பட்ட மக்களின் பல்வேறு உரிமைகள், தேவைகள் அடிப்படையில் பள்ளிகள் கட்டப்பட்டாலும், யாரும் சிறந்த கல்வி வாய்ப்பின்றி வளர்ச்சியில் பின் தங்கிவிடக்கூடாது என்பதை அரசாங்கம் கொள்கையாகக் கொண்டிருக்கின்றது.

எ.கா. பணக்காரர்கள் தாங்கள் விரும்பும் பன்னாட்டுப் பள்ளியில் பிள்ளைகளைப் படிக்க அனுப்புவதற்கும் அரசாங்கம் வாய்ப்பினை வழங்குகிறது.

நம்நாட்டிலே தரம் கருதி பிள்ளைகளைப் பன்னாட்டுப்பள்ளியில் பதியும் பெற்றொரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தும் வருகிறது.

இந்திய சமூகத்தில், குறிப்பாகத் தமிழ்ப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தரமான கல்வியைப் பெறவேண்டும் எனும் கடப்பாட்டை அரசாங்கம் கொண்டிருக்கின்றது.

ஆனால், தமிழ்ப்பள்ளியில் கூட மிகச்சிறந்த ஆற்றல்மிக்க மாணவர்கள் படிக்கின்றார்கள். அவர்களும் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு மிகச்சிறந்த கல்வி வாய்ப்புகள் வழங்கப்பட்டால் அவர்களும் உலக அரங்கில் ஒளிர்வார்கள்.

இந்தியர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் ஒரு தமிழ்ப்பள்ளியை உறைவிடத் தங்கும் வசதியைக் கொண்ட பள்ளியாக மாற்றி அங்கு ஆற்றல்மிகு தமிழ்ப்பள்ளி மாணவர்கள் படிக்க வகை செய்தால் என்ன என்று ஏடல் (ஐடியா) தோன்றுகிறது.

ஆற்றல்மிகு மாணவர்கள் விரைவாக கிரகித்து கற்றுக்கொள்ளும் திறன் உள்ளவர்கள். இவர்கள் பின்னாளில் மிகச்சிறந்த பதவிகளில் / பொறுப்புக்களில் அமர்ந்து சமூகத்தின் கெளரவ அடையாளமாக மிளிர சமூகம் உதவ வேண்டும்.