கோல்கட்டா:“மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, தொடர்ந்து மூன்றாவது முறையாக, திரிணமுல் காங்., கட்சி ஆட்சி அமைக்கும்,” என, முதல்வர் மம்தா பானர்ஜி பேசினார்.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, 294 இடங்களை உள்ளடக்கிய சட்டசபைக்கு, வரும் 27ல் துவங்கி, எட்டு கட்டங்களாக தேர்தல் நடக்கவுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும், தீவிர தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டுஉள்ளன.
இந்நிலையில், சர்வதேச பெண்கள் தினமான நேற்று, தலைநகர் கோல்கட்டாவில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், பிரமாண்ட பேரணி நடந்தது; இதில், மம்தா பேசியதாவது:
மேற்கு வங்கத்தில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், 294 இடங்களிலும், எனக்கும், பா.ஜ.,வுக்கும் இடையில் தான் போட்டி இருக்கும்.
ஒன்றை மட்டும் உறுதியாக கூறுகிறேன். இந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்று, தொடர்ந்து மூன்றாவது முறையாக, திரிணமுல் காங்., கட்சி ஆட்சி அமைக்கும்.பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ., தலைவர்கள், தேர்தல் நேரத்தில் மாநிலத்தில் முகாமிட்டு, மக்களை ஏமாற்ற, பொய்களை கூறி வருகின்றனர். பெண்கள் பாதுகாப்பு குறித்து, நமக்கு மோடி பாடம் எடுக்கிறார்.
பா.ஜ., ஆளும் மாநிலங்களில், பெண்களின் நிலை என்ன? பிரதமர் மோடிக்கு விருப்பமான குஜராத்தில் என்ன நிலைமை? கிரிக்கெட் மைதானத்திற்கு, பிரதமரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில், பிரதமரின் புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளது. நம் நாட்டிற்கே, அவரது பெயரை வைக்கும் நாள், வெகு தொலைவில் இல்லை.இவ்வாறு அவர் பேசினார்.
5 எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ.,வில் ஐக்கியம்
சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், திரிணமுல் காங்., கட்சியின் தலைவர்கள் பலர், பா.ஜ.,வில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில், கட்சியின் ஐந்து எம்.எல்.ஏ.,க்கள், நேற்று பா.ஜ.,வில் இணைந்தனர். சோனாலி குஹா, ரவீந்திரநாத் பட்டாச்சார்யா, ஜத்து லாஹிரி, திபேந்து பிஸ்வாஸ் மற்றும் சிதால் சர்தார் உள்ளிட்ட ஐவரும், பா.ஜ., மாநில தலைவர் திலிப் கோஷ் முன்னிலையில், கட்சியில் இணைந்தனர்.
dinamalar