மாலிக் விமர்சனம்

நடிகர்     பகத் பாசில்

நடிகை    நிமிஷா சஜயன்

இயக்குனர் மகேஷ் நாராயணன்

இசை     சுஷின் ஷியாம்

ஓளிப்பதிவு     சனு வர்கீஸ்

பெரும்பான்மையாக இஸ்லாமியர்களும் கிறித்தவர்களும் கேரளாவில் வசிக்கும் மீனவ கிராமம் ஒன்றின் உரிமைகளுக்காக சிறு வயது முதலே குரல் கொடுக்கிறார் அகமதலி சுலைமான் என்னும் அலி இக்கா (மாலிக்). மக்களின் நலன்களுக்காக போராடும் அவர் கடத்தல் தொழிலில் ஈடுபடுகிறார். தன் மக்களுக்காக கொலை செய்யவும் துணிகிறார். இதன் காரணமாக ‘உள்ளூர் டான்’ ஆக உருவெடுக்கிறார் அலி இக்கா.

அவரை தீர்த்துக்கட்ட உறவினர்கள் மற்றும் நண்பர்களில் சிலரும், அரசு இயந்திரமும் திட்டம் போட்டுக் கட்டம் கட்டுகிறது. இதன் விளைவாக அலி இக்காவுக்கு என்ன ஆகிறது என்பதே படத்தின் மீதிக்கதை.

அலி இக்காவாக பகத் பாசில் முத்திரைப் பதித்துள்ளார். நாயகன், வட சென்னை படங்கள் பாணியில் ஆரம்பம் முதல் முடிவு வரை பல வயது தோற்றங்களில் வருகிறார். அனைத்திலும் அந்த வயதுக்கே உடைய உடல் மொழியுடனும், முதிர்ச்சியுடனும் நடித்து அசத்துகிறார். கமலின் சினிமா வாழ்க்கையில் நாயகன் அவருக்கு எப்படிப்பட்ட இடத்தைத் தந்ததோ, பகத்துக்கு ‘மாலிக்’ அப்படியொரு இடத்தைத் தந்துள்ளது. அவரின் மனைவியாக ரோஸ்லின் கதாபாத்திரத்தில் வரும் நிமிஷா சஜயன், படம் முழுக்க பகத்துக்குப் பக்க பலமாக இருக்கிறார்.

இயக்குநர் திலீஷ் போத்தன், ‘ஜகமே தந்திரம்’ புகழ் ஜோஜு ஜார்ஜ் வினய் போர்ட், தினேஷ் பிரபாகர் ஆகியோருக்கும் படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்கள். அனைவரும் தங்கள் பங்களிப்பைச் சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.

கொரோனா பெருந்தொற்று சமயத்தில் வெறும் லேப்டாப் கேமராவையும், ஸ்கிரீன் ஷாட்களையும் மட்டுமே வைத்து ‘சி யூ சூன்’ என்கிற படத்தை எடுத்து முத்திரைப் பதித்தவர் இயக்குநர் மகேஷ் நாராயணன். இவர் இயக்குநர் அவதாரம் எடுப்பதற்கு முன்னரே எடிட்டராக தென்னிந்திய திரையுலகில் தடம் பதித்தவர். இதன் காரணமாக படத்தின் முதல் பிரேம் முதல் கடைசி பிரேம் வரை தொழில்நுட்ப ரீதியில் மிகக் கச்சிதமாக இருக்கிறது.

இப்படி படத்திற்குப் பல பிளஸ்கள் இருந்தாலும், பழங்காலத்து ‘ராபின் உட்’ கதை போல ஹீரோ, இருப்பவர்கள் இடத்தில் இருந்து எடுத்து இல்லாதவர்களுக்குக் கொடுக்கிறார். தன்னைச் சார்ந்த மக்கள் கூட்டத்தை விடுவிக்க வந்த விடிவெள்ளி போல் நடந்து கொள்கிறார். டான் மற்றும் கேங்ஸ்டர் படங்களின் க்ளீஷேவான இந்த ஒன்லைனை வைத்தே ‘மாலிக்’ கதை உருவாக்கப்பட்டுள்ளது மிகப் பெரிய மைனஸ்.

பகத், தற்போது மலையாள சினிமா உலகில் மட்டும் பிரபலமான நடிகர் அல்ல. இந்தியாவைத் தாண்டியும் அவர் கலைஞனாக கவனிக்கப்படுகிறார். அப்படி இருக்கையில் ஒரு மாஸ் ஹீரோ சப்ஜெக்டில் நடித்து தன்னை ஒரு ‘சூப்பர் ஸ்டார்’ அந்தஸ்துக்கு உயர்த்திக் கொண்டதால், இனி அந்த லைனிலேயே பயணிப்பாரா அல்லது தன்னை ஒரு ‘கலைஞன்’ ஆகவே விஸ்தரித்துக் கொள்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தற்கால இந்திய சினிமாக்களில் மாஸ் ஹீரோக்களுக்குப் பஞ்சம் இல்லை, நடிப்புத் திறமையுள்ள கலைஞர்களுக்கே வெற்றிடமே அதிகமாக உள்ளது.

மொத்தத்தில் ‘மாலிக்’ இனிப்பு டானிக்.

maalaimalar