கல்லூரி மாணவர்களுக்கு ஒரே மாதத்தில் 2 தடுப்பூசி?

சென்னை : ”கல்லுாரி மாணவர்களுக்கு ஒரே மாதத்தில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்துவது குறித்து மத்திய அரசிடம் அனுமதி பெற்று செயல்படுத்தப்படும்,” என, பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வ விநாயகம் கூறினார்.

தமிழகத்தில் இன்று முதல் பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட உள்ளன. எனவே, பள்ளி ஆசிரியர்கள், 18 வயதுக்கு மேற்பட்ட கல்லுாரி மாணவர்கள், பேராசிரியர்களுக்கு, அந்தந்த கல்லுாரி வளாகத்திலேயே முகாம் அமைத்து, இன்று முதல் தடுப்பூசி போடும் பணி துவங்குகிறது.

‘கோவாக்சின்’ தடுப்பூசிக்கு, முதல் ‘டோஸ்’ மற்றும் இரண்டாவது டோஸ் தவணை காலம், 28 நாட்களாக உள்ளது. ஆனால், கோவாக்சின் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு உள்ளதால், மாணவர்களுக்கு அந்த தடுப்பூசி போடுவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை. எனவே, ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிகள் தான், மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் போடப்பட உள்ளது.

இரண்டாவது டோஸ் தடுப்பூசிக்கான அவகாசம் 84 நாட்கள் என, சராசரியாக மூன்று மாதங்கள் ஆகிறது. இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டால் தான், நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும். எனவே, வெளிநாட்டிற்கு செல்லும் மாணவர்களுக்கு, ஒரே மாதத்தில், இரண்டு தவணை கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்துவதை போல, தமிழக மாணவர்களுக்கும் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து, பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வ விநாயகம் கூறியதாவது: தற்போது வரை, கோவிஷீல்டு தடுப்பூசி இரண்டாம் தவணைக்கான அவகாசம் 84 நாட்களாக உள்ளது. கல்லுாரி மாணவர்களுக்கு பிரத்யேகமாக, அதற்கான நாட்களை குறைப்பது குறித்து மத்திய அரசிடம் ஆலோசித்து, அனுமதி பெற்ற பின் செயல்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

(நன்றி Dinamalar )