பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை தீர்ப்பதில் மத்திய அரசு 100 சதவீதம் தோல்வி: சரத்பவார் குற்றச்சாட்டு

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இன்று கோலாப்பூரில் கூறியதாவது:-

நரேந்திர மோடி அரசு கடந்த 2014-ல் ஆட்சிக்கு வந்தபோது, பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை போன்ற பிரச்சினைகளை தீர்ப்போம் என மக்களுக்கு உறுதி அளித்தனர். ஆனால், அவர்கள் 100 சதவீதம் தோல்வி அடைந்துவிட்டனர். அதற்கான விலையை மக்கள் சரியான நேரத்தில் அவர்களிடம் இருந்து திருப்ப எடுத்து கொள்வார்கள். பொதுமக்கள் பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை போன்ற பிரச்சினைகளை சந்தித்து வரும்போது, மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் அந்த பிரச்சினையில் கவனம் செலுத்த தயாராக இல்லை.

மக்களை திசைத்திருப்ப அவர்கள், மதம் சார்த்த செயல்களை ஊக்குவித்து வருகின்றனர். சிலர் அயோத்திக்கு செல்வதும், பஜனை பாடுவதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அயோத்தி செல்வது தேசிய பிரச்சினை இல்லை.

தேச துரோக சட்டம் பழமையானது என ஏற்கனவே பீமா கோரேகாவ் விசாரணை ஆணையத்தில் கூறியுள்ளேன். தங்களுக்கு எதிராக களகத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக, ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த சட்டம் அது.

தற்போது நாம் சுதந்திரம் அடைந்துவிட்டோம். எல்லோருக்கும் தங்கள் குரலை எழுப்ப உரிமை இருக்கிறது. தேச துரோகம் சட்டத்தை, மறுஆய்வு செய்வதாக மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் கூறியுள்ளதாக படித்தேன். அது உண்மையெனில், நல்லது.

மராட்டியத்தில் அமலாக்கத்துறை சோதனைகள் குறைந்ததாக தெரியவில்லை. ஆனால், மத்திய அரசுக்கு தொடர்புடையவர்களின் இடங்களில், அமலாக்கத்துறை சோதனை நடத்தியதாக நான் எங்கும் படிக்கவில்லை. எதிர்கட்சிகள் மீது தான் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு மின்னணு முறையில் நடக்கும் என அமித்ஷா கூறியுள்ளார். ஆனால், அது என்ன மாதிரியான மின்னணு கணக்கெடுப்பு என்பது பின்னர் தெரியவேண்டும்.

மாநில உள்ளாட்சி தேர்தலில் மகாவிகாஸ் அகாடி கூட்டணி தொடர்வது குறித்து, எங்களுக்கு கட்சிக்குள்ளேயே இருவகையான கருத்து உள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. நாட்டிலேயே மராட்டியத்தில்தான் அதிக ஜி.எஸ்.டி. வசூலாகிறது.

ஆனால், மாநிலத்திற்கு வர வேண்டிய ஜி.எஸ்.டி. பாக்கி இன்னும் செலுத்தப்படவில்லை. சரியான நேரத்தில் ஜி.எஸ்.டி. பங்கு வழங்கப்படவில்லை எனில், அது மாநிலத்தில் நடைபெறும் மேம்பாட்டு பணிகளை கடுமையாக பாதிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

Malaimalar