இந்தியா, அமெரிக்கா ஆகியவற்றுடனான உறவை அடுத்த நிலைக்குக் கொண்டுசெல்லும் ஆசியான்

இந்தியா, அமெரிக்கா ஆகியவற்றுடனான உறவை ஆசியான் அடுத்த நிலைக்குக் கொண்டுசெல்கிறது. இருநாடுகளுடனும் விரிவான உத்திபூர்வ பங்காளித்துவ உடன்பாடு செய்துகொள்ளப்பட்டுள்ளது.

ஆசியான்-இந்தியா கலந்துரையாடல் உறவின் ஒருங்கிணைப்பு நாடு என்ற வகையில் அந்த மேம்பாட்டைப் பெரிதும் வரவேற்பதாகச் சிங்கப்பூர் தெரிவித்தது. ஆசியானும் இந்தியாவும் உறவை மேம்படுத்திக் கொள்ள அது வலுவான அடிப்படையைக் கொடுத்திருப்பதாகச் சிங்கப்பூர் தெரிவித்தது.

வர்த்தகத்தையும் முதலீட்டையும் அதிகரிக்க இருதரப்பும் முயற்சிகளை எடுக்கவேண்டும் என்று பிரதமர் லீ சியென் லூங்  வலியுறுத்தினார்.  இந்நிலையில் ஆசியானும் அமெரிக்காவும் அவற்றின் உறவை இயன்றவரை மேம்படுத்திவருவதாகக் கம்போடியாவில் நடைபெறும் ஆசியான் தலைவர்கள் மாநாட்டில் அவர் தெரிவித்தார்.

ஆசியானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட விரிவான உத்திபூர்வ பங்காளித்துவ உடன்பாடு அதற்கு ஓர் எடுத்துக்காட்டு என்று பிரதமர் லீ சுட்டினார். அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு குறித்தும் அவர் கருத்துரைத்தார்.

சீனாவுடன் உள்ள பூசலைத் தணிக்கவும் இருதரப்புக்கு இடையிலான நம்பிக்கையை வளர்க்கவும் அமெரிக்கா முயற்சி எடுக்கும் என்று ஆசியான் நம்புவதாக அவர் சொன்னார். இருநாட்டு உறவு வட்டாரத்தின் அமைதியையும் நிலைத்தன்மையையும் பாதிக்கக்கூடியது என்றும் திரு லீ வலியுறுத்தினார்.

வட்டார நாடுகள் அனைத்தும் அமெரிக்காவுடனும் சீனாவுடனும் நல்லுறவுகளை நிலைநாட்ட விரும்புவதாக அவர் சொன்னார். அடுத்த வாரம் நடைபெறவுள்ள G20 உச்சநிலை மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் சீன அதிபர் சி சின்பிங்கும் சந்திக்கவுள்ளனர்.

 

 

-smc