ராஜஸ்தானில் இன்று சட்டப்பேரவை தேர்தல்: மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு

ராஜஸ்தானில் சட்டப்பேரவை தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கிறது.

ராஜஸ்தானில் மொத்தம் 200 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இங்குள்ள கங்காநகர் மாவட்டத்தின் காரன்பூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் இறந்ததால், அந்த தொகுதியில் மட்டும் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் 51,756 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 5.25 கோடி பேர் தகுதி பெற்ற வாக்காளர்கள். இதில் 2.73 கோடி பேர் ஆண்கள், 2.52 கோடி பேர் பெண்கள். மொத்தம் 1,862 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர்.

ராஜஸ்தானில் தேர்தல் பிரச்சாரம் கடந்த 23-ம் தேதி மாலையுடன் முடிவடைந்தது. வேட்பாளர்கள் நேற்று காலைவீடு, வீடாக சென்று ஆதரவு திரட்டினர். முதல்வர் அசோக் கெலாட், ஜோத்பூரில் மக்களிடம் வாக்கு சேகரித்தார். முன்னாள் முதல்வரும், பாஜக வேட்பாளருமான வசுந்தரா ராஜே, ஜல்ரபதன் பகுதியில் வீடாக, வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

ராஜஸ்தானில் பாஜக – காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இங்கு கடந்த 25 ஆண்டுகளாக காங்கிரஸ், பாஜக மாறி மாறி ஆட்சியை பிடித்து வருகின்றன.

ஆனால், இந்த முறை ஆட்சியை தக்கவைப்போம் என காங்கிரஸ் நம்புகிறது. அடுத்த ஆட்சியை அமைக்க பாஜகவும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் 61,021 பேர் ஏற்கெனவே வீட்டில் இருந்தபடி வாக்களித்து விட்டனர்.

வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடக்க, மாநிலம் முழுவதும் தேர்தல்ஆணையம் தீவிர ஏற்பாடுகளை செய்துள்ளது.

700 கம்பெனி துணை ராணுவப் படையினர், 120 கம்பெனி அதிரடி படையினர், ஊர்க்காவல் படையினர் 18 ஆயிரம் பேர்,பிற மாநில ஊர்க்காவல் படையினர் 15 ஆயிரம் பேர், 70 ஆயிரம் போலீஸார்பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இத்தேர்தலில் 65,277 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 67,580விவிபாட் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

ராஜஸ்தானில் இன்று பதிவாகும் வாக்குகள் டிச.3-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

 

 

-ht