13வது பொதுத்தேர்தல் வேட்பாளர்களைத் தேர்தெடுப்பதில் முதிர்ச்சியைக் காட்டுக!

கால் பிடிப்பவனுக்கும் வால் பிடிப்பவனுக்கும் தேர்தலிலே வேட்பாள்களாக நிற்பதற்கு இடம் கொடுத்தால் கடந்த 50, 52 ஆண்டுகளாக என்ன நடந்ததோ அதுவே நன்றாகவே நடக்கும். என்ன நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும். இதுதான் புதிய கீதாச்சாரம். மஇகா, ஜசெக, கெஅடிலான் உட்பட!

தலைவர்களாக உள்ளவர்கள் என்ன முடிவு எடுக்கிறார்களோ அதுதான் காலங்காலமாக நடந்து வருகிறது. எல்லா நிலையிலும், அந்தத் தலைவர்களைத் தேர்ந்தெடுக்க தொண்டர்கள் தேவை. தலைவர்களாக வந்தபின் தலைவர்கள் கட்டுப்பாட்டுக்குள் கட்சிகளும் தொண்டர்களும் இருந்தாக வேண்டும். இல்லையென்றால் விரட்டப்படுவீர்கள் இதுதான் நடக்கும்.  இது இந்திய சமுதாயத்தின் தலைவிதி.

இந்தத் தலைவிதியை மாற்றி சற்று வித்தியாசமாக எதிர்வரும் நாட்டின் 13வது பொதுத்தேர்தலை எதிர்கொள்ள இந்திய தலைவர்கள். கால்பிடிப்பவர்களையும் வால் பிடிப்பவர்களையும் தேர்ந்தெடுக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்வது சமூகத்தின் மேல் உள்ள அக்கறையால் என்பது என் எண்ணம்.

எதிர்கால இந்திய சமுதாயம் நிறைவான வளமான கல்விகற்ற சமுதாயமாக, பொருளாதாரப் பலம் பெற்ற சமுதாயமாக, எல்லா நிலையிலும் தன் அடையாளத்தை இழக்காத சமுதாயமாக, விளங்க வேண்டுமானால் சமுதாய மேம்பாட்டுச் சிந்தனை அதன் வளர்ச்சியில் அக்கறையும், பொறுப்புமிக்கப் எந்தப் பாகுபாடுமில்லாது எல்லாரையும் அரைவணைத்துச் செல்லக்கூடிய முதிர்ச்சி பெற்ற தூரநோக்குச் சிந்தனையுள்ள கல்வி கற்ற தமிழ்மொழி உணர்வும் இனவுணர்வுமிக்க வேட்பாளர்களையே மஇகா தேர்ந்தெடுத்துத் பொதுத்தேர்தலில் நிறுத்த வேண்டும். இது வேண்டுகோள். இல்லை. விண்ணப்பம்.

காக்காய் பிடிப்பவர்களுக்கும் காதைக் கடிப்பவர்களுக்குமாக வேட்பாளர்களாகத் தேர்வுச் செய்தால் 50, 52 ஆண்டுகாலமாக என்ன நடந்ததோ அதுவேதான் நடக்கும். மறுக்க முடியாத உண்மை!

ஏறி வந்த ஏணியையே எட்டி உதைக்கின்ற வேட்பாளர்கள் நமக்கு வேண்டாம்.

எல்லா நிலையிலும் சமுதாய நலனுக்காக உழைக்கின்ற – சுயவிருப்பு வெறுப்புகளுக்கு இடங்கொடுக்காதவர்களையே தேர்ந்தெடுங்கள்.

கால் பிடிப்பவர்களுக்கும் காக்காய் பிடிப்பவர்களுக்கும் இனி இடமில்லை. அடிக்கடி கட்சி மாறுகின்ற கருமங்கள் நமக்கு வேண்டாம்.

வேஷம் நாசம் என்று ஏமாற்று வேலை ஏதுமில்லாமல் விவேகமாகச் சிந்தித்து எதிர்கால சமுதாயத்தின் உயர்வுக்கும் உரிமைகளுக்கும் மொழிக்கும் இனத்தின் ஏற்றத்திற்கும் குரல் கொடுத்து உண்மையாக உழைக்கும் வேட்பாளர்களை 13வது பொதுத்தேர்தலில் தேர்ந்தெடுத்து நிறுத்துக.

வெற்றி பெற்றபின் பணத்துக்கு விலைப்போகும் ‘லாலான்கள்’ நமக்கு வேண்டாம்.

காசுக்கு கட்சி மாறும் வேட்பாளர்களால் எந்தப் பயனுமில்லை. இப்படிப்பட்ட புல்லுருவிகளைக் கவனமாக தேர்வு செய்ய கட்சி தலைமைத்துவம் கடமைப்பட்டுள்ளது.

உறவுகளுக்கே பட்டம் பதவி வேலை வாய்ப்புகள் என்று குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டாமல் உறவுகளுக்கு அப்பாலும் உண்மை நேர்மை (அரசியலில் இதெல்லாம் எடுபடாதுதான்) உழைப்புக்கும் என்று சற்று மாற்றி சிந்திக்கும் வேட்பாளர்களையே தேர்ந்தெடுங்கள்; நிறையவே சாதிக்கலாம்.

-மூர்த்தி, கோலாலம்பூர்