மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 15 காவல்துறையினர் பலி

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள கட்சிரோலி மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நிலக்கண்ணிவெடித் தாக்குதலில் இந்திய மத்திய ரிசர்வ் காவல்ப் படையைச் சேர்ந்த 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதி வழியாக காவல்துறையினர் பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது, அது நிலக்கண்ணிவெடித் தாக்குதலுக்கு இலக்கானது.

இந்தத் தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளதை சி.ஆர்.பி.எப் அதிகாரியான பிசி கந்தூரி உறுதிசெய்துள்ளார். தாக்குதல் நேற்று காலை 11.30 மணியளவில் நடந்ததாகவும் அவர் கூறினார். தாக்குதலில் காயமடைந்தோரின் எண்ணிக்கை இதுவரை அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் 15 பேர்வரை காயமடைந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சி.ஆர்.பி.எப் படையின் இயக்குனர் கே. விஜய்குமார் தற்போது மகாராஷ்டிராவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருவதாகவும், தாக்குதல் நடந்துள்ள இடத்துக்கு அவர் விரைந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் மத்தியப் பகுதியில் இருக்கும் வனப் பகுதிகள் பல ஆண்டுகளாக மாவோயிஸ்டுகளின் வலிமையான தளமாக இருந்து வருகிறது. இந்தியாவுக்கு மிகப்பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தல் மாவோயிஸ்டுகள் மூலமாக வருவதாக இந்திய தலைமையமைச்சர் மன்மோகன் சிங் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் காவல் துறை மீது நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல் இதுதான். கடந்த வாரம் ஒடிசாவைச் சேர்ந்த ஒரு எம்.ஏல்.ஏவை மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்றனர். அதற்கு முதல் வாரம் அவர்கள் இரண்டு இத்தாலிய சுற்றுலாப் பயணிகளைக் கடத்திச் சென்றனர். அதில் ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

TAGS: