கோழையாக இருப்பது தவறா ?

(சு. யுவராஜன்)

புக்கிட் கெப்போங்  நிகழ்வுத் தொடர்பாகப் பாஸ் கட்சியின் துணை தலைவர் மாட் சாபு தெரிவித்த கருத்தை பற்றி விவாதிக்க அழைத்த கைரி ஜமாலுடினின் அழைப்பை ஏற்காததால் கைரி அவரை கோழையென வர்ணித்துள்ளார்.

பொதுவாக நமது அரசியல்வாதிகள் பொதுப் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் இருக்க வேண்டிய விவேகத்தை இப்படி ஒருவரை ஒருவர் சாடி கொள்வதில் பயன்படுத்துவது நமக்கு தெரிந்ததே. நாய் குரைக்கிறது, நரி ஊளையிடுகிறது, அரசியல்வாதிகள் இப்படி என வைத்து கொள்ள வேண்டியதுதான்.
 
சரி விடயத்திற்கு வருவோம். புக்கிட் கெப்போங் காவல் நிலையத்தில் 1950-ல் கம்யூனிஸ்டுகளுக்கும் காவலர்களுக்கு நடந்த துப்பாக்கி சண்டையில் மாண்ட காவலர்கள்தான் சுதந்திரப் போராட்ட விரர்களாக நமக்கு காட்டப்பட்டிருக்கிறார்கள்.

இச்சம்பவத்தின் துயரக் கதையை ஜின்ஸ் சம்சுடின் நடித்த திரைப்படத்தின் மூலமும் நாம் அறிவோம். ஆனால் மாட் சாபு, அக்காவலர்கள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்காக போராடியவர்கள், அச்சண்டையில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக போராடிய கம்யூனிஸ்டுகளே உண்மையான சுதந்திர போராட்ட வீரர்கள் என கூறியது சர்ச்சையானது. அதை ஒட்டி ஒரு பொது விவாதத்திற்கு கைரி சாபுவை அழைத்தார். சாபு கைரியோடு பேச தகுதியுள்ளவர்கள் பாஸ் இளைஞரணியே என விலகி கொண்டார். எதிர்ப்பார்த்தது போல கைரி சாபுவை கோழை என வர்ணித்துள்ளார். கைரியிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும் ?
 
இப்பிரச்சனையில் யார் சரி தவறு என உள்ளே நுழையவே தேவையில்லை. கொஞ்சம் உணர்ச்சி வசப்படாமல் யோசிப்போம். கருத்துகளை யார் வேண்டுமானாலும் சொல்லலாம். அதற்கான உரிமையை யாரும் மறுப்பதற்கில்லை. ஆனால் வரலாறு போன்ற அறிவு தளத்தில் ஒரு பொது விவாதத்திற்கு அழைக்க குறைந்த பட்சம் அத்துறையின் நிபுணராக இருக்க வேண்டும் அல்லவா.

ஒரு அறிவியல் துறையைப் பற்றி துல்லியமாக பேச ஒரு அறிவியல் அறிஞரால் மட்டும்தானே முடியும். இத்தகைய வரலாற்று தகவல்களின் அடிப்படையில் விவாதிக்க நீங்கள் ஒரு வரலாற்று அறிஞராக இருக்க வேண்டுமென ஏன் நாம் எதிர்ப்பார்ப்பதில்லை? ரஞ்சிட் சிங் மால்ஹி போன்றவர்கள் விவாதிக்க வேண்டிய விடயங்களை ஏன் இந்த அரசியல்வாதிகள் விவாதிக்க வேண்டுமென நாம் ஏன் நம்முள்ளேயே கேள்வி எழுப்புவதில்லை. அரசியல்வாதிகள் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்ற பொதுபுத்தி முதலில் எளிய மக்களிடம் அகல வேண்டும். கைரியும் சாபுவும் எப்போது வரலாற்று அறிஞர்களாக மாறினார்கள் என்று யாராவது கண்டுபிடித்து சொன்னால் ஒரு குச்சி ஐஸ் செம்பருத்தியின் செலவில் இனாம் !
 
கைரிக்கு எப்போதுமே விவாதங்கள் பிடித்திருக்கிறது. மற்றவர்களின் விவாதங்களில் கூட அவர் தலையை நுழைத்து விடுகிறார். அன்வார்/நஜிப் விவாதம் உங்களுக்கு நினைவிருக்கும்.

சரி கைரியின் கோழை சொல்லாடலுக்கு வருவோம். பொதுவாக கோழையாகவோ, பலவீனமாகவோ அறிவற்றவராகவோ இருப்பது கொலை குற்றமா என்ன? அனைவரும் ஏதோ ஒரு இடத்தில் கோழைகளாக, ஒரு தளத்தில் பலவீனர்களாக, இன்னொரு இடத்தில் அறிவற்றவர்களாக இருந்த கணங்களை கடந்துதான் வந்திருக்கிறோம்.

ஆகையால் சில நேரங்களில் இப்படி இருப்பது தவறல்ல. ஆனால் வாய் திறக்கும்போதெல்லாம் பொய்யும், கண் திறக்கும்போதெல்லாம் கொள்ளையும் , கை வைக்குமிடமெல்லாம் லஞ்சமும் வாங்குவது நிச்சயம் தவறு மட்டுமல்ல, வெட்கத்துக்குரியதாகும். ஆகையால் கோழைகளை, பலவீனர்களை அறிவற்றவர்களை தயவு செய்து அவமானப்படுத்த வேண்டாம்.