இந்திய தலைநகரில் இராணுவம் குவிப்பு: இராணுவப் புரட்சியா?

இந்திய மத்திய அரசுக்கு தெரிவிக்காமல், கடந்த ஜனவரி மாதம், டில்லி அருகே இராணுவம் குவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்ததுடன் அங்கு இராணுவப் புரட்சி என்ற வதந்தியும் வெளியாகியது.

எனினும், அத்தகவல் முற்றிலும் முட்டாள்தனமானது. இந்திய அரசு மற்றும் இராணுவம் மீது, சேற்றை வாரி வீச முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று, இந்திய இராணுவ தளபதி வி.கே.சிங் கூறினார்.

கடந்த ஜனவரி மாதம், 16-ஆம் தேதி நள்ளிரவில், டில்லி அருகே இராணுவம் குவிக்கப்பட்டதாகவும், மத்திய அரசுக்கு தெரியாமல் இது நடந்ததாகவும், நேற்று முன்தினம் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியானது. இதற்கு விளக்கம் அளித்த இந்திய தலைமையாசிரியர் மன்மோகன் சிங், “இது வீண் பீதியை கிளப்பும் செயல்” என்றார். “ஜனநாயகத்திற்கு எதிராக, இராணுவம் செயல்படாது” என, இராணுவ அமைச்சர் அந்தோணியும் உறுதி அளித்தார்.

இந்நிலையில், மூன்று நாள் பயணமாக நேபாளம் சென்றுள்ள இராணுவத் தளபதி வி.கே.சிங், அந்நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில், நிருபர்களைச் சந்தித்தார்.

அப்போது, அவர் கூறியதாவது: ஜனவரி மாத மத்தியில், இராணுவத்தின் இரண்டு பிரிவுகள், டில்லியை நோக்கி முன்னேறியதாக வெளியான தகவல்கள், முற்றிலும் முட்டாள்தனமானவை. மத்திய அரசு மற்றும் இராணுவத்தின் மீது, சேற்றை வாரி வீச, தேவையற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இராணுவத்தின் தலைமைக்கு எதிராக, கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுவது வருந்தத்தக்கது. தேவையற்ற தகவல்களை சொல்வோர், பிரச்னைகளை சந்திக்க நேரிடும். இவ்வாறு வி.கே.சிங் கூறினார்.

TAGS: