எளிமையாக பழகி மக்களை கவரும் உத்தரபிரதேச முதல்வர்!

இந்தியாவின் உத்தரபிரதேச முதல்வராக பதவி ஏற்றதில் இருந்தே அகிலேஷ் யாதவ் மக்களிடம் மிகவும் எளிமையாக பழகி வருகிறார். யார் என்றாலும் அவரை சந்திக்க முடியும் என்ற நிலையை ஏற்படுத்தி உள்ளார்.

மாயாவதி முதல்வராக இருந்தவரை முதல்வரின் அரசு வீட்டுக்குள் யாரும் அவ்வளவு எளிதாக நுழைந்துவிட முடியாது. பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகமாக இருக்கும்.

ஆனால் அகிலேஷ் யாதவ் பதவி ஏற்றதுமே காவல்துறை கெடுபிடிகள் அனைத்தையும் அகற்ற உத்தரவிட்டு விட்டார். தன்னை சந்திக்க யார் வந்தாலும் அவர்களை தாராளமாக அனுமதிக்க வேண்டும் என்று கூறி விட்டார்.

அகிலேஷின் தந்தை முலாயம் சிங் முதல்வராக இருந்தபோது பொது மக்கள் தன்னை சந்திக்க வசதியாக ‘ஜனதா தரிசனம்’ என்ற ஒரு திட்டத்தை கொண்டு வந்திருந்தார். குறிப்பிட்ட நாட்களில் ‘ஜனதா தரிசனம்’ நடக்கும் அப்போது பொதுமக்கள் அவரை சந்திக்கலாம்.

ஆனால் அகிலேஷ் யாதவ் இந்த திட்டத்தை மாற்றி அமைத்து நாள்தோறும் மக்கள் சந்திக்கும் வகையில் ஏற்பாடுகளை செய்து உள்ளார். இதனால் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் அவரை சந்தித்து தங்கள் குறைகளை தெரிவித்து விட்டு செல்கின்றனர்.

தன்னை சந்திக்க வரும் பொதுமக்கள் குறைகளை தீர்ப்பதற்காகவே அதிகாரிகள் கொண்ட தனிக்குழுவையே நியமித்து உள்ளார். அகிலேசை சந்தித்து விட்டு சென்ற கிராமவாசி ராம்ஸ்வருப் என்பவர் கூறும்போது; உத்தரபிரதேசத்தில் அதிகாரிகளைகூட அவ்வளவு எளிதாக சந்திக்க முடியாது ஆனால் முதல்வரை எளிதாக சந்திக்க முடிகிறது என்று கூறினார்.

TAGS: