மாணவி தலை துண்டித்து கொலை: மாணவருக்கு தூக்கு தண்டனை!

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஜெயின்ட் சேவியர் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இங்கு படித்து வந்தவர்கள் குஷ்பூ மற்றும் பிஜேந்திரகுமார். இவர்கள் இருவரும் காதலர்கள் என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று கல்லூரி வளாகத்தில் ஏராளமான மாணவர்களும், ஆசிரியர்களும் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது குஷ்பூ தனது வகுப்பறையை விட்டு வெளியே வந்தார். அங்கு நின்றிருந்த பிஜேந்திரகுமார் தான் மறைத்து வைத்திருந்த வெட்டு கத்தியால் குஷ்பூவை வெட்டினார். இதில் குஷ்பூவின் தலை துண்டானது. இதைப் பார்த்த ஆசிரியர்களும், மாணவர்களும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். தலைவேறு, உடல் வேறாக கிடந்த குஷ்பூ கோலத்தை பார்த்து விவரிக்க முடியாத துக்கத்தில் ஆழ்ந்தனர்.

பிஜேந்திரகுமார் அருகில் செல்லவே அஞ்சினர். தகவல் அறிந்து போலீசார் அங்கு வந்தனர். எந்தவித சலனமும் இல்லாமல் கத்தியுடன் நின்றிருந்த பிஜேந்திரகுமாரை கைது செய்தனர். இந்த வழக்கு ராஞ்சி கோர்ட்டில் நடந்தது. போலீஸ் தரப்பில் வக்கீல் வி.என்.சர்மா வாதாடினார். அப்போது, இது அரிதிலும் அரிதான ஒரு வழக்கு. இவருக்கு அளிக்கப்படும் தண்டனை மற்ற மாணவர்களுக்கு பாடமாக அமைய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இவ்வழக்கில் தீர்ப்பு கூறிய நீதிபதி, இது நன்கு திட்டமிட்டு செய்த படுகொலை. எதேச்சையாக, உணர்ச்சி வேகத்தில் நடந்த கொலை என்பதை ஏற்க முடியாது என்றார். பின்னர் மாணவர் பிஜேந்திரகுமாருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார். இந்த தீர்ப்பை கேட்டதும், பிஜேந்திரகுமார் கதறி அழுதார். நான் எந்த தவறும் செய்யவில்லை. குஷ்பூவின் பாட்டிதான் முக்கிய குற்றவாளி என்று கத்தி கதறினார். அவரை போலீசார் கோர்ட்டுக்கு வெளியே இழுத்துச் சென்றனர்.

TAGS: