மாவோயிஸ்டுகளால் கடத்திச் செல்லப்பட்ட கலெக்டர் பால்மேனன் விடுதலை

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளால் கடத்திச் செல்லப்பட்டு, 12 நாட்களாக அவர்களின் பிடியில் இருந்த, சுக்மா மாவட்ட கலெக்டரான தமிழகத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பால்மேனன் நேற்று மாலை விடுவிக்கப்பட்டார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில், சுக்மா மாவட்ட கலெக்டராகப் பணியாற்றிய, தமிழகத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பால்மேனன், (வயது 32), கடந்த 21-ம் தேதி மாவோயிஸ்டுகளால் கடத்திச் செல்லப்பட்டார். அவரை விடுவிக்கும் முயற்சியை மேற்கொள்வதற்காக, அரசு தரப்பிலும், மாவோயிஸ்டுகள் தரப்பிலும், தலா இரண்டு பேரைக் கொண்ட தூதுக்குழு அமைக்கப்பட்டது. அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை விவரங்களை, மாவோயிஸ்ட் தரப்பில் பேச்சு நடத்திய பேராசிரியர் ஹர்கோபால், பி.டி.சர்மா ஆகியோர், வனப் பகுதிக்குள் சென்று, மாவோயிஸ்ட் தலைவர்களிடம் தெரிவித்து திரும்பினர்.

இதன்பின், மாவோயிஸ்டுகளின் கோரிக்கை குறித்து, அரசு தரப்பு பிரதிநிதிகளுடன், அவர்கள் ஆலோசனை நடத்தினர். இதில், இரு தரப்புக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, கலெக்டர் அலெக்ஸ் பால்மேனன் நேற்று விடுவிக்கப்படுவார் என, மாவோயிஸ்டுகள் தெரிவித்தனர். அதன்படி, தத்மெட்லா என்ற இடத்தில், நேற்று மாலை கலெக்டர் அலெக்ஸ் பால்மேனன், மாவோயிஸ்டுகளுக்காக அரசு தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்திய, ஹர்கோபால் மற்றும் சர்மாவிடம் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து 30 நிமிட பயண தூரத்தில் உள்ள, சிந்தல்நார் என்ற இடத்தில் உள்ள, மத்திய ரிசர்வ் போலீஸ் படை முகாமிற்கு காரில் அழைத்து வரப்பட்டார்.

TAGS: