அதிநவீன தற்காப்பு கவச ஏவுகணையை இந்தியா தயாரித்துள்ளது. இரண்டு நகரங்களில் இதை, விரைவில் நிறுவவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், இரண்டு நகரங்கள், அன்னிய நாட்டினர் ஏவுகணை தாக்குதலில் இருந்து தப்பிக்கும்.
எதிரி நாட்டில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளை தடுக்கும் வகையிலான தற்காப்பு கவச ஏவுகணையை, மத்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (டி.ஆர்.டி.ஓ.,) தயாரித்துள்ளது. இதன் சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத் தலைவர் வி.கே.சரஸ்வத் கூறியதாவது:2,000 கி.மீ., தூரத்தில் இருந்து ஏவப்படும் ஏவுகணையை, தாக்கி அழிக்கும் தற்காப்பு கவசத்தின் சோதனை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. வரும் 2016ல், இது, 5,000 கி.மீ., தூரத்தில் இருந்து ஏவப்படும் ஏவுகணையை தாக்கி அழிக்கக் கூடிய வகையில் மேம்படுத்தப்படும். மிக விரைவில், நாட்டின் இரண்டு இடங்களில் இது நிறுவப்படும். அந்த இரண்டு நகரங்கள் எவை என, இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இதற்கான கட்டமைப்பு வசதிகள் எங்கு உள்ளதோ, அந்த நகரங்களில் இது நிறுவப்படும்.
பிரித்வி ஏவுகணைகளை ஏவி, அது இலக்கை அடையும் முன் அழிக்கிறதா என்ற முறையில் பரிசோதித்து பார்க்கப்பட்டது. சோதனை வெற்றிகரமாக நடந்துள்ளதன் மூலம், இது போன்ற ஏவுகணை தற்காப்பு கவசத்தை வைத்திருக்கும் ஏவுகணை தொழில்நுட்பத்தில் தலைசிறந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.இவ்வாறு சரஸ்வத் கூறினார்.