பெண்ணாக மாற விரும்பிய இளைஞருக்கு நீதிமன்றம் அனுமதி

அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாற விரும்பிய இளைஞருக்கு மும்பை உயர் நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது.

அசாம் மாநிலம் கவுகாத்தியை சேர்ந்த மாணவர் பிடன் பரூவா (வயது 21). தன்னை ஒரு பெண்ணாகவே கருதும் இவர், பாலின மாற்று அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாற விரும்பினார். இதற்காக மும்பை வந்த பரூவா, உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கினார். பைகுலாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் 17-ம் தேதி அறுவை சிகிச்சை நடைபெற இருந்தது. இது பற்றி தெரிந்ததும் பரூவாவின் தந்தை மும்பை வந்து அறுவை சிகிச்சையை தடுத்து நிறுத்தினார். பரூவாவின் வங்கி கணக்கையும் முடக்கினார்.

இதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்து கொள்ள அனுமதிக்குமாறு பெற்றோருக்கு உத்தரவிடக்கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் பரூவா மனு தாக்கல் செய்தார்.

அறுவை சிகிச்சைக்கு அனுமதி தராவிட்டால் தற்கொலை செய்துக் கொள்வேன் என்று பரூவா மிரட்டல் விடுத்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.ஜே.வஜிவ்தர் மற்றும் ஏ.ஆர்.ஜோஷி ஆகியோர் பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசு மற்றும் மகாராஷ்டிரா அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர், ”பரூவா பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள ஆட்சேபம் இல்லை” என்று கூறினர். இதையடுத்து, பெண்ணாக மாறும் அறுவை சிகிச்சை செய்து கொள்ள  பரூவாவுக்கு நீதிபதிகள் அனுமதி வழங்கினர். நீதிபதி வஜிவ்தர் கூறுகையில், “மனுதாரருக்கு 21 வயது ஆகிறது. அவர் மேஜர் என்பதால் தனது  வாழ்க்கை சம்பந்தப்பட்ட முடிவுகளை அவர் எடுப்பதை எந்த சட்டமும் தடை செய்யவில்லை” என்றார்.

TAGS: