இந்தியாவின் ஹரியானா மாநிலத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை, அத்துறையில் பணிபுரியும் பெண் ஊழியர்கள், புடவை மற்றும் சுடிதார் போன்ற பாரம்பரிய இந்திய உடைகளையே அணிந்து வரவேண்டும், ஜீன்ஸ் மற்றும் டி-ஷர்ட் போன்ற “ கண்ணியக்குறைவான” ஆடைகளை அணியக்கூடாது என்று சர்ச்சைக்குரிய உத்தரவொன்றைப் பிறப்பித்திருக்கிறது.
இந்த சுற்றறிக்கை பெண்ணியவாதிகளின் கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
விவாகரத்து வழக்கொன்றை விசாரித்த மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருவர், விவாகரத்து கோரிய மனைவிக்கு, ராமாயணக் கதாநாயகி சீதை வாழ்ந்த்தைப் போல, கணவருக்கு விசுவாசமாக நடந்துகொள்ளவேண்டும் என்று அறிவுரை கூறியதாகச் செய்திகள் வந்தன.
இது குறித்து பதிலளித்த பெண்ணியவாதியும் வழக்கறிஞருமான அருள்மொழி உடை விஷயத்தில் ஹரியானா அரசுத் துறையின் நடவடிக்கை , ஓரளவு புரிந்துகொள்ளக்கூடியதே என்றாலும், மாற்றுக் கலாச்சார உடைகளை கண்ணியமற்ற உடை என்று கூறுவது சரியல்ல என்றார்.
அதுபோல , சீதை போல் நடந்து கொள்ளவேண்டும் என்று நீதிபதிகள் கூறியிருப்பதற்கும், முன்னுதாரணங்கள் உள்ளன. இதை வெளிப்படையாக கண்டிக்க முடியாத சூழ்நிலை நீதிமன்றங்களில் வழக்கறிஞர்களுக்கு இருக்கிறது என்றார்.