சக மனிதனின் துக்கம் கண்டு பொங்குகிற யாருமே கம்யூனிஸ்ட்தான் !

“என்னை கடத்தியதும் கம்யூனிஸ்ட்கள், மீட்க உதவியதும் கம்யூனிஸ்ட்கள்தான் என்றார்கள். நான் சொல்கிறேன்… கடத்தப்பட்ட நானும் கம்யூனிஸ்ட்தான். நான் ஒரு உண்மையான கம்யூனிஸ்ட். சக மனிதனின் துக்கம் கண்டு பொங்குகிற, போராடுகின்ற யாருமே கம்யூனிஸ்ட்தான்” என்கிறார் இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்களால் கடத்தப்பட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன்.

நேற்று நெல்லை மாவட்டத்தில் தமது சொந்த ஊருக்குவந்தார் கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன். காலையில் ரயிலில் வந்தவர், தமது கிராமமான சமாதானபுரத்திற்கு சென்று உறவினர்களை சந்தித்தார். மாலையில் பல்வேறு அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழாவில் அவர் பேசியதாவது:

நான் கடத்தப்பட்டபோது எனக்காக குரல் கொடுத்த நெல்லை மாவட்டத்து மக்களை நினைக்கும்போது நெகிழ்வாக உள்ளது. நான் ஆறு ஆண்டுகள் அங்கு பணியாற்றியுள்ளேன். அப்போதெல்லாம் பத்திரிகை, மீடியாவின் வெளிச்சத்தில் இருந்து தப்பித்திருக்கிறேன்.

தற்போது அதற்கெல்லாம் சேர்த்து தெரிய ஆரம்பித்துள்ளேன். இருப்பினும் நான் மேற்கொண்ட மக்கள் பணிக்காக நான் தெரிந்துகொண்டால் மகிழ்ச்சியடைவேன். கடத்தப்பட்ட கலெக்டர் என்ற அடையாளம் எனக்கு தேவையில்லை. சுக்மாவிற்கு முன்னதாக இன்னொரு மாவட்டத்தில் பணியாற்றியபோது அங்கு சுயஉதவி பெண்கள் குழுக்களுக்காக பணியாற்றியுள்ளேன்.

நான் கடத்தப்பட்ட சுக்மா மாவட்டம் மட்டுமல்லாது பக்கத்து மாவட்டங்களிலும் மக்கள் என்னை விடுவிக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அந்த அளவு மக்கள் என் மீது அன்பு வைத்திருந்தார்கள். அரசியல்வாதிகள் கடத்தப்பட்டபோதெல்லாம் மக்களிடம் ஏற்படாத எழுச்சி நான் கடத்தப்பட்டபோதும் இன்னொரு கலெக்டர் கிருஷ்ணா கடத்தப்பட்டபோதும் மட்டுமே இத்தகைய எழுச்சி ஏற்பட்டது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் தமிழர்களான பாரதிதாசன், பிரசன்னா, அன்பழகன், ஆர்.பிரசன்னா உள்பட ஐந்து பேர் கலெக்டர்களாக உள்ளோம். நேர்மையுடனும், உள்ளத்திடத்தோடும் பணியாற்றுவதில் தமிழர்களுக்கு நிகர் எவரும் இல்லை என்பதை புரிந்துகொண்டிருக்கிறார்கள்.

நான் கடத்தப்பட்டிருந்தபோது, ஏன் கடத்தினோம் என என்னிடம் மாவோயிஸ்ட்கள் மூன்று காரணங்களை தெரிவித்தனர். அங்கு போலீஸ் காவலில் நடந்த ஒரு இறப்பு குறித்தும், முன்பு பணியாற்றிய ஒரு எஸ்.பி.,க்கு ஜனாதிபதி விருது வழங்கப்பட்டதற்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என கூறியும், அதிகாரிகள் நடத்திய ஒரு கூட்டம் குறித்தும் கேள்வி எழுப்பியிருந்தார்கள். அதற்கு நான் தெளிவான பதில் தந்தேன். போலீஸ் காவலில் நடந்த இறப்பிற்கு அதை விட யாரும் செய்யமுடியாதபடி மனித உரிமை ஆணையத்திற்கு தகவல் தெரிவித்து, தன்னிச்சையான டாக்டர்களால் பரிசோதனை செய்தது ஆகியவற்றை தெரிவித்தேன். மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் தெளிவான பதில் சொன்னதால் அவர்களால் எதுவும் செய்ய இயலவில்லை.

சுக்மா மாவட்டம் துவக்கப்பட்டு முதல் கலெக்டராக நியமிக்கப்பட்டிருந்ததால் அடிப்படை பணிகளை மேற்கொள்ளவேண்டியிருந்தது. நான்கு மாதங்களில் 4 ஆயிரத்து 500 பேருக்கு பட்டா வழங்கியுள்ளோம். 9 ஆயிரம் பேருக்கு அந்யோதயா திட்டத்தின் கீழ் உணவு உறுதியளித்துள்ளோம். 7 ஆயிரத்து 500 பேருக்கு வீடுகள் கட்டிதந்துள்ளோம். சவுக்கெடுத்து அடிக்காத குறையாத அதிகாரிகளை வேலை வாங்கி அனைத்து கிராமங்களிலும் ரேஷன் கடைகளை முறைப்படுத்தி வழங்கியுள்ளோம்.இதையெல்லாம் நான் அவர்களிடம் குறிப்பிட்டு என்னை ஏன் கடத்தினீர்கள் என்றேன்.

நேர்மைத்திறனோடு செயல்பட்டதால் மாவோயிஸ்ட்களின் துப்பாக்கிகளுக்கு மத்தியிலும் நான் பணியாற்றியதை பேசமுடிந்தது. ஒவ்வொருவருக்கும் “அறச்சீற்றம்’ இருக்கவேண்டும். இத்தகைய சீற்றம் வயிற்றில் எரிந்துகொண்டேயிருக்கவேண்டும். அப்போதுதான் வெற்றிபெற முடியும். சத்தீஸ்கரில் எனக்காக போராடிய மக்களை நினைத்து பார்க்கிறேன். அவர்களை நான் நிர்க்கதியாக விட்டு விட விரும்பவில்லை. எனவே நான் அந்த மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன். நான் அரசியலில் இணைவேனா என ஒரு நிருபர் கேட்டார். அத்தகைய எண்ணமில்லை. எனவே அவரிடம் நானே புதிய கட்சி ஆரம்பிக்கப்போகிறேன். ஏதாவது பெயர் இருந்தால் சொல்லுங்கள் என ஜாலியாக சொன்னேன். அந்த அடித்தட்ட மக்களுக்காக நான் தொடர்ந்து கலெக்டராக இருந்துகொண்டே போராடுவேன்.வெளியில் இருந்து அரசாங்கத்தை குறைசொல்வதை விட உள்ளே இருந்துகொண்டு பணியாற்றுவதுதான் சிறந்தது இவ்வாறு அலெக்ஸ்பால் மேனன் பேசினார்.

TAGS: