பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் 52 இடங்களில் மத்திய அரசு பணிமனையின் முன்பு அதிமுகவினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டங்களில் எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள், கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
பெட்ரோல் விலை சில நாட்களுக்கு முன் லிட்டருக்கு 7.50 இந்திய ரூபா உயர்த்தப்பட்டது. இதனைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் அல்லாத கட்சிகள் ஆர்ப்பாட்டம், பேரணி, சாலை மறியல் என பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன.
பெட்ரோல் விலை உயர்வுக்கு கடும் கண்டனம் தெரிவித்த அதிமுக பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா, பெட்ரோல் விலை உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி அதிமுக அமைப்புரீதியாக செயல்படும் 52 மாவட்டங்களில் இந்திய மத்திய அரசு பணிமனைகள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என அறிவித்திருந்தார். அதன்படி, தமிழகம், புதுச்சேரியில் மத்திய அரசு பணிமனைகள் முன்பு செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய அதிமுக மாவட்டச் செயலாளர் ஜி. செந்தமிழன், பெட்ரோல் விலையை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தியதோடு செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கியுள்ள மத்திய காங்கிரஸ் அரசையும், திமுகவையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றார்.