கூடங்குளம் போராட்டம்: மனித உரிமைகள் மீறப்பட்டதாக புகார்!

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்தவர்களின் அடிப்படை மனித உரிமைகளும், ஜனநாயக உரிமைகளும் மீறப்பட்டுள்ளதாக “கூடங்குளம் போராட்டத்துக்கான சென்னை ஆதரவுக் குழு” எனும் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பொது விசாரணைகளின் போது கண்டறியப்பட்டுள்ளதாக கூறி ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஏ பி ஷா, வழக்கறிஞர் கீதா ராமசேஷன் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் பேராசிரியர் கல்யாணி ஆகியோர் அடங்கிய மூவர் குழுவே பொது விசாரணகளின் போது தாங்கள் அறிந்து கொண்ட விஷயங்கங்ளை திங்கட்கிழமை சென்னையில் ஒரு அறிக்கையாக வெளியிடும் போதே இந்தக் கருத்துக்களை கூறியுள்ளனர்.

தமிழகத்தின் கூடங்குளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அணுமின் நிலையம் விரைவில் மின் உற்பத்தியை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு அதற்கு எதிரான போராட்டங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

ஒரு ஜனநாயக நாட்டில் மாற்றுக் கருத்துக்கு இடம் உண்டு எனும் நிலையில், கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக போராடிய மக்கள் மீது, தேசத்துரோகம், அரசுக்கு எதிராக போர் புரிதல் போன்ற வழக்குகள் தொடரப்பட்டுள்ளது கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது என்றும் அந்தக் குழு தனது அறிக்கையில் கூறியுள்ளது.

கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கும் வகையில், மத்திய மாநில அரசுகள் செயல்படுவது, போராடி வருபவர்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறும் செயல்மட்டுமன்றி ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படும் செயலுமாகவே கருதப்பட வேண்டும் என பேராசிரியர் கல்யாணி பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

கூடங்குளத்தில் நடைபெற்ற போராட்டங்களை மத்திய மாநில அரசுகள் நசுக்கிய போது, மத்திய மற்றும் மாநில மனித உரிமைகள் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அந்தக் குழுவினர் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

எனினும் தமது அறிக்கை அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும், சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

TAGS: