“தமிழரான அப்துல் கலாமை குடியரசுத் தலைவராக்க வேண்டும்” என்ற குரல் தமிழகத்தில் இருந்து அல்ல, வடமாநில அரசியல் தலைவர்களிடம் இருந்து தான் எழுந்துள்ளது.
“தமிழினத் தலைவர்” என, அழைத்துக் கொள்ளும், தி.மு.க., தலைவர் கருணாநிதி, இவ்விஷயத்தில், ‘மவுனகுரு’வாக இருப்பது, தமிழர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவரை தேர்வு செய்யும் விஷயத்தில், இந்தியா முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. தொடர் ஆலோசனை, கூட்டணிக் கட்சிகளுடன் கலந்துரையாடல், யார், யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது போன்ற ஆலோசனைகள் டில்லியில் சூடுபிடித்துள்ளன.
குடியரசுத் தலைவர் தேர்தலில், காங்கிரசின் வேட்பாளராக பிரணாப் முகர்ஜி அறிவிக்கப்படும் முன், சோனியாவை சந்தித்தார் மேற்கு வங்க முதல்வர் மம்தா; சந்திப்புக்கு பின், நேராக முலாயம் சிங் யாதவை சென்று மம்தா பார்த்தார். தொடர்ந்து, “குடியரசுத் தலைவர் தேர்தலில் அப்துல் கலாம், மன்மோகன் சிங், சோம்நாத் சட்டர்ஜி ஆகிய மூவரில் ஒருவரை நிறுத்தினால் தான் எங்கள் ஆதரவு” என, குண்டை தூக்கி போட்டார்.
மம்தாவின் அதிரடியால், காங்கிரஸ் வட்டாரம் கலகலத்தது. மம்தாவும், முலாயமும் அறிவித்த மூவரில், மன்மோகனும், சோம்நாத் சட்டர்ஜியும் அரசியல் சார்புள்ளவர்கள் என்பதால், எதிரான அரசியல் கட்சிகள் இவர்களை ஏற்பது சிரமம் தான். ஆனால், எல்லாருக்கும் பொதுவான, அரசியல் சாயல் இல்லாத ஒரே வேட்பாளர் கலாம் மட்டுமே.
தமிழகத்தைச் சேர்ந்த கலாம் மீண்டும் குடியரசுத் தலைவராகும் வாய்ப்புகளை, இரண்டு வடமாநிலத் தலைவர்கள் தான் தற்போது உருவாக்கியுள்ளனர். கலாமை குடியரசுத் தலைவராக்க வேண்டும் என்ற முதல் குரல், தமிழகத்தில் இருந்து அதுவும், “தமிழினத் தலைவர்” எனக் கூறிக் கொள்ளும் கருணாநிதியிடம் இருந்தல்லவா முதலில் எழுந்திருக்க வேண்டும். ஆனால், கருணாநிதி, வழக்கம்போல, தான் சார்ந்திருக்கும் கூட்டணியின் தலைமை நிறுத்தும் வேட்பாளரை ஆதரிப்போம் என, சிம்பிளாக அறிவித்து விட்டு, ஒதுங்கிக் கொண்டார்.
“குடியரசுத் தலைவர், பிரதமர் தேர்வுகளில் நான் முக்கிய பங்கு வகித்திருக்கிறேன்” என கருணாநிதி, அடிக்கடி கூறிக் கொள்வார். ஆனால், நிஜத்தில் அவரது பங்களிப்பு எதுவுமில்லை என்பது தான் நிதர்சனம். இந்திய மத்திய அரசில் எந்தக் கூட்டணியில் கருணாநிதி இருக்கிறாரோ, அந்தக் கூட்டணி தேர்வு செய்யும் வேட்பாளரை கேள்வி கேட்காமல் ஆதரிப்பது தான் இவரது பணி. மம்தாவை போல, “இவரை நிறுத்துங்கள்; அவரை நிறுத்துங்கள்” என குறுக்குசால் எல்லாம் ஓட்ட மாட்டார்.
“கருணாநிதியைப் பொறுத்தவரை தமிழர் ஒருவர், தன்னை விட உயர்ந்த பதவியில் அமர்வதை விரும்ப மாட்டார்” என, தமிழக காங்கிரசின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகிறார். இது குறித்து, அவர் மேலும் கூறியதாவது:
“கடந்த, 1996ம் ஆண்டு, லோக்சபா தேர்தல் முடிந்ததும், காங்கிரஸ், பா.ஜ., அல்லாத இடதுசாரிகள் உள்ளிட்ட மாநிலக் கட்சிகள் இணைந்து உருவான ஐக்கிய முன்னணி ஆட்சிக்கு வந்தது. ஐக்கிய முன்னணியில், தி.மு.க., – த.மா.கா., – தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தன.
அப்போது, இந்தக் கட்சிகளின் தலைவர்கள் எல்லாம் டில்லியில் கூடி, யாரை பிரதமராக தேர்வு செய்வது என ஆலோசித்தனர். முதலில், வி.பி.சிங்கை பரிசீலிக்க, உடல்நிலையை காரணம் கருதி அவர் மறுத்து விட்டார். பின்னர், மேற்கு வங்க முதல்வராக இருந்த ஜோதிபாசுவை தேர்வு செய்ய, அவருக்கு விருப்பம் இருந்தும், அவரது மார்க்சிஸ்ட் கட்சி அதை தடுத்து விட்டது.
பிரதமர் பதவிக்கு மூன்றாவதாக பரிசீலிக்கப்பட்டவர், த.மா.கா., தலைவர் மூப்பனார். எளிமையும், அமைதியும் கொண்ட மூப்பனாரை எல்லா கட்சிகளும் ஆதரிக்க முன் வந்தன. ஆனால், “அரசியலில் தன்னை விட வயதிலும், அனுபவத்திலும் ஜூனியரான மூப்பனாரை பிரதமராக்கி விட்டு, அவர் தமிழகம் வரும்போது, விமான நிலையத்தில் காத்து கிடந்து நான் வரவேற்பதா?” என, கருணாநிதி, ‘மாத்தி’ யோசித்தார்!
உடனே, இடதுசாரிகளை தூண்டி விட்டு, “த.மா.கா., தலைவராக இருந்தாலும், அடிப்படையில் மூப்பனாரும் காங்கிரஸ்காரர் தான்; அவரை பிரதமராக்குவதும் ஒன்று தான்; காங்கிரசிடம் ஆட்சியைக் கொடுப்பதும் ஒன்று தான்” எனக் கூறி, பிரதமர் பதவியில் மூப்பனார் அமர்வதை தடுத்தவர் தான் கருணாநிதி. அதன்பின்னரே தேவகவுடாவுக்கு பிரதமர் பதவி கிடைத்தது. அதுபோலவே, தற்போதும் தமிழர் கலாமை ஜனாதிபதி பதவியில் அமர்த்த கருணாநிதி விரும்ப மாட்டார். அதற்காக எந்த முயற்சிகளும் எடுக்க மாட்டார்.” இவ்வாறு அவர் கூறினார்.