இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்

தமிழகம்: நடுக்கடலில் மீன்பிடித்த ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீன்பிடிக்க விடாமல் விரட்டியதாக கரை திரும்பிய மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை புகார் தெரிவித்தனர்.

ராமேசுவரத்தில் இருந்து ஜூன் 16-ம் தேதி, சுமார் 800 விசைப்படகுகள் மீன் பிடிக்கச் சென்றன. இப்படகுகள், மீன்வளம் நிறைந்த இலங்கை கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தன. அப்போது, சூறாவளி காற்றினால் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுந்தது. இதனைப் பொருட்படுத்தாமல் இலங்கை கடற்படையினர் அங்கு ரோந்து வந்தனராம். பின்னர், மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி விரட்டியுள்ளனர். இதனால், மீனவர்கள் தொடர்ந்து மீன்பிடிக்க முடியாமல் வேகமாக கரை திரும்பினர். இதனால், தங்களுக்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள், இலங்கை மீனவர்கள் மீன்பிடிக்கும் மன்னார், நெடுந்தீவு, இரணத்தீவு பகுதியின் கடலோரத்தில் மீன்பிடிப்பது வழக்கம். ஆனால், அப்பகுதியில் இலங்கை மீனவர்கள் மீன்பிடிக்க கூண்டு வலைகளை கடலுக்குள் வைத்திருப்பார்கள்.

இங்கு ஜூன் 16-ம் தேதி சில ராமேசுவரம் விசைப்படகுகள் மீன்பிடித்ததில், இலங்கை மீனவர்கள் கடலுக்குள் வைத்திருந்த கூண்டு வலைகளை சேதப்படுத்தி உள்ளனராம். இதனால், இலங்கை மீனவர்களுக்கு பல ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. கூண்டு வலை சேதத்தால், இலங்கை மீனவர்கள் கோபமடைந்து உள்ளனர். இதனால், இருநாட்டு மீனவர்களின் உறவு பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கூண்டு வலைகளைச் சேதப்படுத்திய ராமேசுவரம் மீனவர்கள் யார் என்பது குறித்து, தமிழக உளவுப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

TAGS: