கொல்கத்தா: இந்திய குடியரசு வேட்பாளராக அப்துல் கலாமை நிறுத்தலாம் என்று கடந்த புதன்கிழமை முலாயம்சிங் யாதவும், மம்தா பானர்ஜியும் சேர்ந்து முடிவு செய்து அறிவித்தனர்.
மறுநாள் வியாழக்கிழமை முலாயம் சிங் யாதவிடம் காங்கிரஸ் தலைவர்கள் பேச்சு நடத்தினார்கள். இதையடுத்து காங்கிரஸ் பக்கம் முலாயம்சிங் யாதவ் சேர்ந்தார்.
நேற்று பிரணாப் முகர்ஜியை காங்கிரஸ் கட்சி வேட்பாளராக அறிவித்ததும் அவருக்கு முழு ஆதரவு கொடுப்பதாக முலாயம் சிங் கட்சி அறிவித்தது. இதனால் மம்தா பானர்ஜி தனிமைப் படுத்தப்பட்டார்.
என்றாலும் அவர் தன் நிலையை மாற்றிக் கொள்ள விரும்பவில்லை. கடைசி நிமிடம் வரை முலாயம்சிங் நம்ப வைத்து துரோகம் செய்து விட்டதாக மம்தா பானர்ஜி வேதனை அடைந்துள்ளார்.
மம்தா கட்சி எம்.பி.க்கள் இன்று காலை பேட்டி அளிக்கும்போது முலாயம் சிங்கை துரோகி என்று கூறினார்கள். தற்போதைய சூழ்நிலையில் மம்தா பானர்ஜியின் கருத்துக்கு மற்ற கட்சிகளிடம் எந்த ஆதரவும் கிடைக்கவில்லை. எனவே அப்துல் கலாம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமாட்டார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறினார்கள்.
தனது முயற்சி தோல்வி அடைந்ததால் கொல்கத்தா திரும்பி விட்ட மம்தா பானர்ஜி ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பார் என்று தெரிகிறது. இந்த நிலையில் தன் முகநூல் பக்கத்தில் அவர் தன் மனக் குமுறல்களைக் கொட்டி எழுதியுள்ளார்.
அதில் அவர் எழுதி இருப்பதாவது:-
இந்திய குடியரசு வேட்பாளராக வேட்பாளராக அப்துல் கலாமை நான் செய்த தேர்வு, லட்சக்கணக்கான இந்திய மக்களின் தேர்வாகும். லட்சக்கணக்கான இந்தியர்கள் அப்துல் கலாமை இந்திய குடியரசு தலைவர் பதவியில் பார்க்க விரும்பினார்கள். அவர்களது மன உணர்வையே நான் பிரதிபலித்தேன்.
எனது கட்சி மிகவும் சிறிய கட்சி. மற்ற கட்சிகள் வைத்திருப்பது போன்று பெரிய அளவில் செல்வங்களுடன் இருக்கும் கட்சிபோல நாங்கள் பெரிய கட்சி அல்ல. வாய்மையின் அடிப்படையில் நாங்கள் கட்சி நடத்துகிறோம். இதுவரை வாழ் நாள் முழுக்க நான் என் கொள்கையில் உறுதியாக இருந்துள்ளேன். நான் எடுத்த முடிவில் உறுதியாக இருப்பேன்.
ஜனநாயகத்தில் மக்களின் விருப்பமே உச்சமானது. எனவே பொதுமக்கள் அனைவரும் தங்கள் தொகுதி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களிடம் அப்துல்கலாமை ஆதரிக்கும்படி மனு கொடுக்க வேண்டும்.
உங்கள் குரலை ஓங்கி எழுப்புங்கள். மக்கள் விருப்பத்துக்கு நான் தலை வணங்குவேன்.
இந்திய ஏவுகணை உலகின் தந்தையான அப்துல்கலாம் இந்தியர்கள் அனைவருக்கும் முன் உதாரணமாக இருந்து வருகிறார். அவர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர். அவர் உண்மையை எதிர் நோக்குபவர். நிரம்ப அறிவு உடையவர். இத்தகைய குண நலம் கொண்ட ஒருவரையே இந்திய குடியரசு தலைவர் பதவியில் அமர்த்த இந்தியர்கள் அனைவரும் விரும்புகிறார்கள்.
இவ்வாறு தன் முகநூல் பக்கத்தில் மம்தா பானர்ஜி எழுதியுள்ளார்.