இந்திய குடியரசுத் தலைவராக ஒருமுறை பதவி வகித்துவிட்டேன். அந்த அனுபவமே எனக்குப் போதுமானது என்று இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.
இந்திய மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், சூரியஒளி, காற்றாலை மூலம் மாற்று எரிசக்தி தயாரிப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கலாம் பங்கேற்றார். அங்கு வந்திருந்தவர்களிடமும் அவர் கலந்துரையாடினார்.
அப்போது, நீங்கள் ஏன் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடவில்லை என்பதுதான் பலருடைய கேள்வியாக இருந்தது. அதற்கு, ” மிக உயரிய அப்பதவிக்கு, நாட்டு நலன் கருதும் தலைவரை, அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த கருத்துடன் தேர்வு செய்ய வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். அதற்கு இந்திய அரசியல் மேலும் வளர வேண்டும். நான் ஏற்கெனவே ஒருமுறை குடியரசுத் தலைவராக இருந்து அப்பதவியில் போதிய அனுபவத்தைப் பெற்றுவிட்டேன். எனவே மற்றவர்களுக்கும் அந்த வாய்ப்பை அளிக்க வேண்டும்” என்றார்.
தொடர்ந்து மத்தியப் பிரதேச மாநில வளர்ச்சிக்காக நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் குறித்தும் அவர் பேசினார்.