பிரணாப்- சங்மா வேட்பு மனுக்கள் ஏற்பு

இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் இரு பிரதான வேட்பாளர்களின் மனுக்களும் பரிசீலனைக்கு பிறகு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் முன்னாள் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட வேண்டும் என எதிர்கட்சிகளின் வேட்பாளர் பி ஏ சங்மா முறையிட்டிருந்தார்.

வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் நாளில் பிரணாப் முகர்ஜி, ஊதியம் பெறும் பதவியான, கொல்கத்தாவிலிருந்து செயல்படும், இந்திய புள்ளியியல் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இருந்தார் எனவும், அதன் காரணமாக அவரது மனு நிராகரிக்கப்பட வேண்டும் எனவும் சங்கா தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் மனு தாக்கல் செய்யும் முன்பாகவே அப்பொறுப்பிலிருந்து பிரணாப் முகர்ஜி விலகிவிட்டார் என்று ஆளும் தரப்பில் வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களை கேட்ட தேர்தல் அதிகாரி, பிரணாப் முகர்ஜி விதிமீறல் எதையும் செய்யவில்லை என்று கூறி அவரது வேட்பு மனு ஏற்கப்படுவதாக அறிவித்தார்.

இத்துடன் இந்த விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டதாக, நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரும், முகர்ஜி அவர்களின் தலைமை தேர்தல் முகவருமான பவன் குமார் பன்சல் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படையில் வேட்பு மனு தாக்கல் செய்யப்படுவது தொடர்பில், தேர்தல் அதிகாரியின் முடிவை எதிர்த்து சிவில் நீதிமன்றதில் முறையீடு செய்ய முடியாது.

அரசியல் சாசனத்தின் 58 ஆவது பிரிவின் கீழ், ஊதியம் பெறும் பதவியில் ஒருவர் இருந்தால், அவர் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட தகுதி இல்லாதவர் என்று கூறப்பட்டுள்ளது.

TAGS: