இலங்கை விமானப்படை வீரர்கள் ஒன்பது பேர், தாம்பரம் விமானப்படை நிலையத்தில் தொழில்நுட்பப் பயிற்சி பெற வந்துள்ளதாக வெளியான தகவல், தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
“இது தமிழ் இனத்துக்கு எதிரான இந்திய மத்திய அரசின் நடவடிக்கை” என கண்டித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, “வீரர்களை உடனே இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டுமென” வலியுறுத்திஉள்ளார்.
தி.முக., தே.மு.தி.க., ம.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளோடு, தமிழக காங்கிரஸ் கட்சியும், சிங்கள வீரர்களை உடனே திருப்பி அனுப்ப வேண்டுமென குரல் எழுப்பியுள்ளன.
சென்னையை அடுத்த தாம்பரத்தில் இந்திய விமானப்படை பயிற்சி நிலையம் உள்ளது. இங்கு, விமானங்களை பராமரித்தல் மற்றும் பழுது பார்ப்பதற்கான பொறியியல் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. விமானப்படை வீரர்கள் பல்வேறு பிரிவுகளாக, இங்கு வந்து பயிற்சி பெற்று திரும்புகின்றனர். இந்திய படை வீரர்களோடு, இந்திய மத்திய அரசின் ஒப்புதலோடு வெளிநாடுகளைச் சேர்ந்த விமானப்படை வீரர்களும், பயிற்சி பெறுகின்றனர்.
இந்நிலையில், இலங்கை விமானப்படையைச் சேர்ந்த ஒன்பது வீரர்கள் பயிற்சி பெறுவதற்காக தாம்பரம் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கைத் தமிழர் பிரச்னை; தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் காரணமாக, இலங்கை அரசுக்கு எதிராக, தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் போர்க் குரல் எழுப்பி வரும் நிலையில், இலங்கை வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்க அனுமதித்துள்ளது அதிர்ச்சியளித்துள்ளது.
இலங்கை விமானப் படையினருக்கு, தமிழகத்தில் தொழில்நுட்பப் பயிற்சி அளிப்பது, தமிழர்களுக்கு எதிரான செயல்; சிங்கள படையினரை உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என, இந்திய மத்திய அரசை, தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கை படை வீரர்களுக்கு பயிற்சி என்ற செய்தி, தமிழர்களின் நெஞ்சில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. தமிழர்களுக்கு, தமிழ் இனத்திற்கு எதிரான இந்திய மத்திய அரசின் இந்த நடவடிக்கை கண்டனத்துக்குரியது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள், தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்பி, சிங்களவர்களுக்கு சமமான உரிமைகளைப் பெறும் வரை, பிற நாடுகளுடன் இணைந்து, இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும் என, தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது, வாய்மூடி மவுனியாக இருந்த மத்திய அரசு, தற்போது, இலங்கை விமானப்படை வீரர்களுக்கு, தமிழகத்தில் பயிற்சி அளிக்க அனுமதி அளித்துள்ளது, தமிழர்களை அவமானப்படுத்தும் செயல். இலங்கை போரில், பன்னாட்டு போர் விதிமுறைகளை மீறி செயல்பட்டவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அனைத்துலக அளவில் குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், இலங்கை படை வீரர்களுக்கு, தமிழகத்தில் பயிற்சி அளிப்பது பொருத்தமற்றது,” என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

























