இந்தியாவில் பிறந்து சட்டபடிப்பு படித்த பக்ருதீன் இப்ராகிம் என்பவர் பாகிஸ்தானின் தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானின் தலைமை தேர்தல் ஆணையர் பதவி கடந்த மார்ச் மாதம் முதல் காலியாக இருந்தது. பாகிஸ்தான் மக்கள் கட்சி பரிந்துரை செய்யும் நபர்களை நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி நிராகரித்து வந்தது. இதையடுத்து அனைவருக்கும் பொதுவான உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியான பக்ருதீன் இப்ராகிம் தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பொது தேர்தல் நடைபெற இருப்பதால், இவரது பணி முக்கியமானதாக கருதப்படுகிறது.
புதிய தலைமை தேர்தல் ஆணையர் இப்ராகிம், குஜராத்தின் ஆமதாபாத்தில் 1928-ஆம் ஆண்டில் பிறந்தவர். வித்தியா பீடத்தில் படித்த இப்ராகிம், 49-ஆம் ஆண்டு சட்டபடிப்பை முடித்தார். தத்துவயியல் பாடத்தை விரும்பி படித்த இப்ராகிமுக்கு, மகாத்மா காந்திஜி பாடம் நடத்தியுள்ளார்.
இதன் காரணமாக தான் இப்ராகிம், அகிம்சையின் மீது இன்று வரை அதிக நம்பிக்கை கொண்டுள்ளார். கடந்த 50-ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு இப்ராகிம் குடிபெயர்ந்தார். உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும், சட்டத்துறை அமைச்சராகவும், சிந்து மாகாணத்தின் கவர்னராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.