இலங்கை படையதிகாரிகள் தமிழகத்தில்: குன்னூரில் பரபரப்பு

தமிழகத்தில் நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே வெலிங்கடன் என்ற இடத்தில் உள்ள இந்திய இராணுவ பயிற்சி மையத்திற்கு இலங்கை இராணுவத்தின் 57-ம் பிரிவு படையணியின் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் மற்றும் கடற்படையின் ரியர் அட்மிரால் எஸ்.என்.ரணசிங்க ஆகிய இருவரும் பயிற்சிபெற வந்திருக்கும் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பல நாடுகளையும் சேர்ந்த இராணுவப் படைகளின் உயர் அதிகாரிகள் பலரும் பயிற்சிக்காக வந்துசெல்கின்ற இந்த இராணுவ பயிற்சி மையத்திற்கு ஞாயிற்றுக்கிழமை 10 நாடுகளைச் சேர்ந்த 25 அதிகாரிகள் வந்திருக்கிறார்கள்.

இவர்களில் இலங்கைப் படையைச் சேர்ந்த இந்த இரண்டு அதிகாரிகளும் வந்திருக்கும் செய்தி பரவியதையடுத்தே அப்பகுதியில் பரபரப்பு கிளம்பியிருக்கிறது.

இவர்கள் அனைவரும் தங்க வைக்கப்பட்டிருக்கின்ற ஹோட்டலை சுற்றி அசாதாரணமான ஒரு சூழல் நிலவுவதாக உள்ளூர் ஊடகவியலாளர் பிபிசியிடம் தெரிவித்தார்.

அப்பகுதியில் பெருமளவான காவல்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

கடந்த ஆண்டும் இலங்கையைச் சேர்ந்த படையதிகாரிகள் அங்கு வந்தபோது கடுமையான எதிர்ப்பை அவர்கள் சந்திக்கவேண்டி ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைப் படையதிகாரிகள் அங்கு வந்திருக்கும் தகவல் பரவியதை அடுத்து அப்பகுதியில் அரசியல் இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் குவிந்துவருவதாகவும் ஊடகவியலாளர் அனந்தகிருஷ்ணன் கூறினார்.

ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற சிலர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

போர் முடிந்த பின்னர், இலங்கையின் துணைத் தூதராக ஜெர்மனியில் பணியாற்றிய மேஜர் ஜெனரல் ஜகத் டயஸுக்கு எதிராக அங்கு போர்க் குற்றச்சாட்டுக்கள் எழுந்ததன் பின்னணியில் அவர் மீண்டும் நாட்டுக்கு அழைத்துக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

TAGS: