தனி ஈழத் தீர்மானம்: பல்டி அடித்த கருணாநிதி!

தமிழகம்: திமுக தலைவர் மு. கருணாநிதி அடுத்த மாதம் சென்னையில் தனது கட்சி நடத்தவிருக்கும் டெசோ மாநாட்டில் தனி ஈழம் கோரி தீர்மானம் எதுவும் நிறைவேற்றப்படாது எனக் கூறியிருக்கிறார்.

மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஞாயிற்றுக்கிழமை (15.07.2012) கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்திருந்தார். அச்சந்திப்பு குறித்து அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லையாயினும், டெசோ மாநாட்டில் தமிழீழம் கோரி தீர்மானம் எதுவும் நிறைவேற்றப்பட வேண்டாம் என கருணாநிதியிடம் சிதம்பரம் கேட்டுக்கொண்டதாக இன்றைய நாளேடுகளில் செய்தி வெளியாகியிருக்கிறது.

அப்பின்னணியிலேயே இன்று செய்தியாளர்களை திமுக தலைவர் சந்தித்தார்.

அப்போது தனி ஈழம் குறித்த தீர்மானம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டபோது, “தனி ஈழத்தைப் பற்றி கருத்து இருக்கிறதே தவிர, அதை இப்போது அழுத்தந்திருத்தமாகச் சொல்லி, அதற்கான கிளர்ச்சிகளை நடத்துவதாக உத்தேசமில்லை” என்று தெரிவித்துள்ளார்.

“இலங்கையில் ஆயுதப் போராட்டத்திற்குப் பிறகு, ஆயுதப் போராளிகளை சிங்கள இராணுவம் அழித்து ஒழித்துள்ள இந்த நேரத்தில் எஞ்சியுள்ள இலங்கைத் தமிழர்களைப் பாதுகாப்பது, அவர்களின் வாழ்வாதாரங்களை வளப்படுத்துவது, அவர்களுக்கு போரினால் ஏற்பட்ட இன்னல்களைக் களைவது, இவற்றில் எப்படியெல்லாம் நடவடிக்கை எடுக்கலாம், நாட்டம் செலுத்தலாம், ஆதரவு கோரலாம் என்பதற்காகத்தான் இந்த மாநாட்டைக் கூட்டி, அதிலே கலந்து கொள்கின்றவர்களின் அறிவுரை, கருத்துரை ஆகியவற்றையும் நாங்கள் முக்கியமாகக் கருதி, அவற்றின் அடிப்படையில் அமைதியான முறையில் அற வழியில் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பது தான் இந்த மாநாட்டை நடத்துகின்ற எங்களுடைய திட்டமாகும்” எனக் கருணாநிதி செய்தியாளர்களிடம் கூறினார்.

தனி ஈழம் தான் தங்களின் குறிக்கோள் என்று ஏற்கனவே அவர் கூறியிருந்ததை செய்தியாளர்கள் சுட்டிக்காட்டி, தற்போது அதை மாற்றுவதற்கு, இந்திய மத்திய அரசிடமிருந்து தி.மு.க.-விற்கு ஏதாவது நெருக்கடி இருக்கிறதா? எனக்கேட்டபோது, அப்படி நெருக்கடி எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் எதையும் கற்பனை செய்து கொள்ள வேண்டாம் என்றும், உள்துறை அமைச்சர் சிதம்பரம் தன்னிடம் டெசோ குறித்து எதுவும் விவாதிக்கவில்லையென்றும் அவர் கூறினார்.

மேலும் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீட்டிப்பதைப் பற்றி கருத்து தெரிவிக்கவும் அவர் மறுத்துவிட்டார்.

ஆனால், பொதுவாக இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் தீவிரவாதம், ஆயுதப் போராட்டங்கள் நடைபெறக் கூடாது என்பதில் தானும் அழுத்தந்திருத்தமான கருத்து கொண்டவன் என்றும் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

“இலங்கையில் நடந்த ஆயுத போரில் சிங்கள அரசுதான் வெற்றி பெறும் என்று நான் அப்போதே சொன்னேன். என் பேச்சை யார் கேட்டார்கள்” என்று கருணாநிதி இன்று அளித்த பேட்டியில் மேலும் கூறியுள்ளார்.

TAGS: