இந்தியாவின் 13-வது குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி

இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவராக தேந்தெடுக்கப்பட்ட பிரணாப் முகர்ஜி வரும் 25-ம் திகதி புதன்கிழமை பதவியை பொறுப்பேற்கவுள்ளார்.

ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளராகப் போட்டியி்ட்ட பிரணாப் முகர்ஜி 69 சத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட எதிரணியின் ஆதரவு பெற்ற முன்னாள் மக்களவைத் தலைவர் பி.ஏ. சங்மா 31 சத வாக்குகளைப் பெற்றார்.

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேர்தல் அதிகாரியான மாநிலங்களவைச் செயலர் வி.கே. அக்னிஹோத்ரி, பிரணாப் முகர்ஜியின் வெற்றியை முறைப்படி அறிவித்தார்.

நாடாளுமன்றம் மற்றும் மாநிலங்களின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்களித்த இந்தத் தேர்தலில், மொத்தம் 4659 வாக்குகள் பதிவாயின. அவற்றில் செல்லுபடியான 4,578 வாக்குகளின் மதிப்பு 10 லட்சத்து 29 ஆயிரத்து 750 என கணக்கிடப்பட்டது. அதன்படி, பிரணாப் முகர்ஜிக்குக் கிடைத்த வாக்குகள் ஏழு லட்சத்து 13 ஆயிரம் என கணிக்கப்பட்டது. பி.ஏ. சங்மாவுக்குக் கிடைத்த வாக்குகள் 3 லட்சத்து 15 ஆயிரம் என கணிக்கப்பட்டது. செல்லாத வாக்குகளின் மதிப்பு 18 ஆயிரத்து 221 என கணிக்கப்பட்டது.

நாடாளுமன்ற வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கியது. முதலில், எம்.பி.க்களின் வாக்குகள் எண்ணப்பட்டு, பின்னர் அகரவரிசைப்படி, மாநில வாரியாக எம்.எல்.ஏ.க்களின் வாக்குகள் எண்ணப்பட்டன. எம்.பி.க்களைப் பொருத்தவரை, மொத்தமுள்ள 748 வாக்குகளில், பிரணாபுக்கு 527 வாக்குகள் கிடைத்தன. சங்மாவுக்கு 206 வாக்குகள் கிடைத்தன.
ஜெயலலிதா தலைமையிலான அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட காங்கிரஸ் எதிர்ப்பு கட்சிகளின் ஆதரவுடன் சங்மா தேர்தலில் களம் இறங்கினார்.

ஜெயலலிதா தலைமையிலான அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட காங்கிரஸ் எதிர்ப்பு கட்சிகளின் ஆதரவுடன் சங்மா களம் இறங்கினார்.

ஆளும் கூட்டணியில் உள்ளவர்கள் கூட தனக்கு வாக்களிக்க வாய்ப்பிருப்பதாக சங்மா அவர்கள் கூறிவந்த நிலையில், இன்றைய முடிவுகள் அதற்கு எதிர்மாறாக இருந்தன.

கர்நாடகத்தில், சங்மாவுக்குக் கிடைக்க வேண்டிய பாஜக வாக்குகளில் சில பிரணாப் முகர்ஜிக்குக் கிடைத்திருக்கின்றன. இது பாஜக தலைவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாலையில் முடிவுகள் வெளியான நிலையில், பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் மற்றும் பல்வேறு தலைவர்கள் பிரணாப் முகர்ஜியின் இல்லத்துக்குச் சென்று வாழ்த்துத் தெரிவித்தார்கள்.

பிரணாப் முகர்ஜிக்கு, ஆளும் கூட்டணியில் உள்ள காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் மட்டுமன்றி, எதிர்க்கட்சி அணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம், சிவசேனை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவளித்தன.

சங்மாவுக்கு அதிமுக, பாஜக, பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவளித்தன. தேமுதிக, தெலுங்கு தேசம், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட சில கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்தன.

தேர்தலில் தோல்வியைடந்த பி.ஏ. சங்மா, பிரணாப் முகர்ஜிக்கு வாழ்த்துத் தெரிவித்தார். அதேநேரத்தில், பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவரை குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை நாடு இழந்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.

நிதியமைச்சராக இருந்த காலத்தில் அவரது செயற்திறன் தொடர்பில் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டிருந்தாலும் பிரணாப் முகர்ஜி, ஆளும் காங்கிரஸ் கூட்டணியில் மிக அனுபவமும் செல்வாக்கும் மிக்க தலைவர்களில் ஒருவராக இருந்துவந்துள்ளார்.

76 வயதான முகர்ஜி, 40 ஆண்டுகளுக்கும் அதிகமான காலம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.

இன்னும் இரண்டு ஆண்டுகளில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியால் மீண்டும் தொடர்ந்து மூன்றாவது தடவையாகவும் ஆட்சியமைக்கக் கூடிய விதத்தில் பெரும்பான்மை பலத்தை பெறமுடியுமா என்ற கேள்விகள் இருப்பதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஊழல் குற்றச்சாட்டுகளால் காங்கிரஸ் கூட்டணி அரசாங்கம் அண்மைக் காலமாக கடுமையான பிரச்சனைகளை சந்தித்துவருகின்றது.

இந்த நிலையில், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சியாலும் பெரும்பான்மைப் பலத்தை பெற்றுக்கொள்ள முடியாமல் போனால், யார் ஆட்சியமைப்பது என்பதை தீர்மானிப்பதில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி முக்கிய பங்கு வகிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா படீலின் பதவிக்காலம் ஜூலை 24ம் திகதியுடன் முடிவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்திய அரசியலில் குடியரசுத் தலைவர் பதவி என்பது பெரும்பாலும் பெயரளவு தலைமைப் பொறுப்புதான் என்றாலும், சில முக்கிய சந்தர்ப்பங்களில் குடியரசு தலைவர் தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

-BBC

TAGS: