“கை விடப்படவில்லை”: சொல்கிறார் கருணாநிதி

சென்னை: “தனித் தமிழ் ஈழம் வேண்டும் என்ற கோரிக்கை கைவிடப்பட வில்லை” என, தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்தார்.

“இந்திய குடியரசுத் தலைவர் பதவி ஏற்பு விழாவில், தி.மு.க, மத்திய அமைச்சர்கள், எம்.பி.,க்கள் கலந்து கொள்கின்றனர். இந்திய மத்திய அரசின் வலியுறுத்தலை, இலங்கை கடற்படை பொருட்படுத்தாமல் தொடர்ந்து தமிழக மீனவர்கள் மீது, தாக்குதல் நடத்தி வருவது குறித்து, ‘டெசோ’ மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றுவோம். ஐ.மு., கூட்டணி அரசில், கூட்டணிக் கட்சிகளுக்கு மதிப்பு அளிப்பதில்லை என்று தேசியவாத காங்கிரஸ் கூறியிருப்பது அவர்களுடைய கருத்து. எங்கள் கருத்து என்று எதுவும் சொல்ல முடியாது” என தமிழக முன்னாள் முதல்வரான கருணாநிதி கூறினார்.

“காவிரி ஆணையத்தை அன்றைய இந்திய பிரதமர் வாஜ்பாய் ஏற்பாடு செய்து அமைத்தபோது, ஜெயலலிதா அந்த ஆணையத்திற்கு வரமாட்டேன்; அது பல்லில்லாத ஆணையம் என்றார். இப்போது அந்த ஆணையத்தைக் கூட்ட வேண்டும் என்கிறார். அதை நான் வரவேற்றிருக்கிறேன். அந்த அம்மையாரே திருந்தி, அந்த ஆணையத்திற்கு பல் முளைத்து விட்டது என்று சொல்லி ஆணையத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்.”

“‘டெசோ’ மாநாடு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தமிழ் ஈழம் என்பதிலிருந்து எங்கே நாங்கள் பின் வாங்கியிருக்கிறோம்? தனி ஈழம் கோரிக்கை அப்படியே இருக்கிறது. தி.மு.க.,வைப் பொருத்தவரையில் தனித் தமிழ் ஈழம் வேண்டும் என்ற அந்தக் கோரிக்கை கைவிடப்படவில்லை. கைவிடப்பட்டு விட்டது என்று யாராவது சொன்னால், அவர்கள் மக்களால் கைவிடப்பட்டவர்கள்.”

“தி.மு.க.,வைப் பொருத்தவரையில், தனி ஈழம் வேண்டுமென்பதை எங்களுடைய குறிக்கோளாக வைத்திருக்கிறோம். அந்தக் குறிக்கோள் நிறைவேறும் நிலை ஏற்படும்போது, படிப்படியாக நாங்கள் அதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம். இலங்கை இராணுவத்தினருக்கு மேற்கு வங்களாத்தில் பயிற்சி அளித்தால் நாங்கள் எதிர்ப்போம்” இவ்வாறு கருணாநிதி கூறினார்.

TAGS: