-அண.பாக்கியநாதன், பூச்சோங், ஜூலை 28, 2012.
கடந்த புதன்கிழமை ஜூலை 25-ந்தேதி கோலசிலாங்கூர் மாவட்ட தமிழ்ப்பள்ளிகள் நில விவகாரத்தில் டத்தோ தேவமணியின் அறிக்கை வேதனையளிப்பதாக உள்ளது. அன்று தமிழ் பத்திரிக்கைகளுக்கு அவர் விடுத்துள்ள அறிக்கையில் கோலசிலாங்கூர் மாவட்டத்தில் இரண்டு தமிழ்ப்பள்ளிகளுக்கு, பிரவுன்ஸ்டன் தோட்டப் பள்ளிக்கு 2.78 ஏக்கர் நிலத்தையும், கம்பம்பாரு தமிழ்ப்பள்ளிக்கு 3 ஏக்கர் நிலத்தையும் மாற்று இடமாக வாங்கிக் கொடுத்து விட்டதாக மார்த்தட்டி கொண்டுள்ளார்.
ஆனால், அதற்கான ஆரம்ப அடிப்படை வேலைகளைச் செய்த சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினரிடமோ, அதற்காக அமைக்கப்பட்ட நடவடிக்கை குழுவிடமோ கலந்து பேசிய பின்னர் அறிக்கை விட்டிருந்தால் சமூகத்துக்கு நன்மையாக இருந்திருக்கும். மேற்கண்ட இரண்டு தமிழ்ப்பள்ளிகளுக்கும் தலா 6 ஏக்கர் நிலத்தை வழங்க வேண்டும், அப்படி அது சாத்தியப்படா விட்டால் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு சைம்டார்பி நிறுவனமே பள்ளி கட்டடத்தை கட்டித்தருவதாக இருந்தால் குறைந்தது 4 ஏக்கர் நிலத்தை ஏற்று கொள்கிறோம் என்று சிலாங்கூர் மாநிலத் தலைமையகத்தில் நடந்த கூட்டத்தில் சைம்டார்பி நிறுவனத்தின் தோட்டப் பிரிவின் துணைத் தலைவரிடம் டாக்டர் சேவியர் கூறியிருந்தார்.
அந்த இடமாற்றம் குறித்து மாநில அரசு தயாரித்த அதே பரிந்துரையை சைம்டார்பி நிறுவனத்திடம் வழங்கிய துணையமைச்சர் தேவமணி அடுத்தவரின் உழைப்பை பயன்படுத்திக் கொண்டதில் எங்களுக்கு வருத்தமில்லை. ஆனால், சமுதாயத்தின் நிலையையோ, உணர்வையோ அறியாமல் நில விவகாரத்தில் கோட்டை விட்டு காரியத்தைக் கொடுத்திருக்கக்கூடாது.
சைம்டார்பி நிறுவனம் கொடுத்துள்ள பிரவுன்ஸ்டன் தோட்டப் பள்ளிக்கு 2.78 ஏக்கர் நிலத்தையும், கம்பம்பாரு தமிழ்ப்பள்ளிக்கு 3 ஏக்கர் நிலத்தையும் சாதனையாகக் காட்டி, ம.இ.கா இன்னும் திருந்தவில்லை, ம.இ.கா தலைவர்கள் எப்பொழுதும் யாசக மனப்பான்மையிலேயே வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள், உரிமைக்காகப் போராடவே மாட்டார்கள் என்பதை மீண்டும் அவர் நிரூபித்து விட்டார்.
சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகள் மட்டுமல்லாமல் நாட்டிலுள்ள பல தமிழ்ப்பள்ளிகளுக்கு அதன் சுய சரித்திரமே இல்லை. அப்படிப்பட்ட நிலையில் எப்படி நில உறுதி பத்திரங்கள் வாங்குவது? இதுதான் பாரிசானின், ம.இ.கா வின் 54 ஆண்டுக்கால சாதனை! இந்தச் சூழ்நிலையில், மந்திரி புசார் பேனாவில் கீறினாலே போதும் நிலம் கிடைத்து விடும் என்று சிலர் கோமாளித்தனமாக அறிக்கை விட்டு சமுதாயத்தை ஏமாற்றி வருகின்றனர்.
ஆனால் சிலாங்கூர் மாநில அரசாங்கம் சுமார் ஒரு லட்சம் வெள்ளியைச் செலவிட்டு ஒவ்வொரு தமிழ்பள்ளியும் எங்கு இருக்கிறது, எப்படி இருக்கிறது, அதன் நிலம் எவ்வளவு பெரியது, எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது, எத்தனை ஆசிரியர்கள், மாணவர்கள் இருக்கிறார்கள், கட்டடம் யாருக்குச் சொந்தம், நிலம் சம்மந்த பட்ட அதிகாரபூர்வமாகத் தேடிய உறுதி கடித்ததுடன், நிலத்தையும் அளந்து எடுத்து முழு சர்வே அறிக்கையுடன் அனைத்து விவரங்களையும் தொகுத்து பள்ளியின் நன்மைக்காக எவரும் அந்த தகவலைப் பயன்படுத்த வசதியாக அதன் நகலை எல்லா தமிழ்ப் பள்ளிகளிடமும் ஒப்படைத்துள்ளது.
இந்த அறிக்கையைத் தயாரிக்க இரவு பகலாக பாடுப்பட்ட E.W.R.F திரு. தியாகராஜன், பி.கே.என்.எஸ் சாமி, தமிழ் அறவாரியம், E.W.R.F , 2009ம், 2010ம் ஆண்டுகளில் பதவி வகித்த பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் மற்றும் பள்ளி வாரியங்களின் பணியும், தமிழ்ப்பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட மானியத்தை அரசு சார இயக்கங்களுக்கு எடுத்து வீண் செலவு செய்து விட்டதைப் போன்றப் பல கண்டனங்களை தொடுத்தவர்களை சகித்துக்கொண்டு நல்ல பரிந்துரையை தயாரிப்பதில் கண்ணும் கருத்துமாய் இருந்த சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் போன்றப் போற்றப்பட வேண்டிய பலரின் உழைப்பை சிறுமைப்படுத்துவதாக உள்ளது தமிழ்ப்பள்ளிக்கு மூன்று ஏக்கர் நிலத்துக்கும் குறைவாக பெற்றுக்கொள்ள சம்மதித்த துணை அமைச்சரின் செயல்.
எப்பிங்கம் தோட்ட விவகாரத்தில், தமிழ்ப்பள்ளிக்கு நாட்டில் எங்கே 6 ஏக்கர் நிலம் தந்துள்ளார்கள் என்ற துணையமைச்சர் மாண்புமிகு சரவணனின் முழக்கத்தை மீண்டும் டத்தோ தேவமணி உறுதிப்படுத்தி தமிழ்ப்பள்ளிகள் மீதான ம.இ.கா வின் கொள்கையை மக்களுக்குத் தெளிவு படுத்தியுள்ளதாக இது அமைகின்றது. இவர்களின் போக்கு கண்டிக்க தக்கதாகவுள்ளது.