தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து; தூக்கத்திலேயே பலர் உயிரிழந்த பரிதாபம்!

நெல்லூர்: ‌இந்திய தலைநகர் டில்லியிலிருந்து சென்னை ‌நோக்கி சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் புகையிரதத்தில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 30-க்கும் மேற்பட்ட பயணிகள் உடல் கருகி பலியாயினர். 20-க்கும் மேற்பட்டோர் காயமுற்ற நிலையில் நெல்லூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீ பிடித்த ‌‌புகையிரத்தின் எஸ் -11 பெட்டியில் இருந்த மொத்தம் 72 பேரில் தீயில் சிக்கி இறந்தவர்களில் 20 ஆண்கள், 6 பெண்கள், 3 குழந்தைகள் அடங்குவர். இதுவரை 28 உடல்கள் புகையிரதத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி., தெரிவித்துள்ளார். முன்னதாக 50 பேர் வரை இறந்து விட்டதாக செய்தி வெளியானது. பயணிகள் தீயி்ல் கருகியதால் பலி எண்ணிக்கை புகையிரத நிர்வாகத்தினரால் சரியாக கணக்கிட முடியவில்லை.

டில்லியிலிருந்து நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு 10.30 மணிக்கு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் புகையிரதம் சென்னைக்கு புறப்பட்டது. ஆந்திர மாநிலம் நெல்லூர் வந்து பின்னர் அதிகாலை 04:30 மணிக்கு புறப்பட்ட சிறிது நேரத்தில், சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் எஸ்-11வது பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. சம்பவம் அறி்ந்து புகையிரத பெட்டிகள் உடனடியாக அகற்றப்பட்டு பயணிகள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். ‌பலர் காயமடைந்துள்ளனர்.

நெல்லூர் மாவட்ட ஆணையர் ஸ்ரீதர் சம்பவ இடத்திற்‌கு சென்று மீட்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளார். இச்சம்பம் பற்றி ஆணையர் கூறுகையில், இது வரை 25 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. மின் கசிவு காரணமாக இவ்விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது. இன்னும் சிலர் பெட்டியில் பலியாகியிருக்கக்கூடும் என்றார்.

தூங்கும் வசதி கொண்ட இந்த 2-ம் வகுப்பு பெட்டியிலிருந்து காயம் அடைந்தவர்கள் நெல்லூர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த பெட்டியில் மொத்தம் 72 பயணிகள் இருந்தனர்.

TAGS: