மாணவர்களிடம் கைத்தொலைபேசி இருந்தால் பறிமுதல் செய்க: தமிழகத்தில் உத்தரவு

தமிழகம்: பள்ளி வகுப்பறைகளில் மாணவர்கள் கைத்தொலைபேசி வைத்திருந்தால் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்று தலைமையாசிரியர்களுக்கு தமிழக பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, தமிழகத்தின் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கையின் மூலம் அறிவுறுத்தல் அனுப்பப்பட்டுள்ளது.

சுற்றறிக்கையின் விவரம்:

* மாணவ, மாணவியர் பள்ளிகளுக்கு கைத்தொலைபேசி எடுத்துவருவது முற்றிலுமாக தடைசெய்யப்படுகிறது.

* வகுப்பறைகளில் கைத்தொலைபேசி பயன்படுத்தப்படாமல் கண்காணிப்பது தலைமையாசிரியரின் பொறுப்பு.

* இந்தத் தடையை மீறி மாணவர்கள் கைத்தொலைபேசி எடுத்து வந்தால், அது பறிமுதல் செய்யப்பட வேண்டும்.

* கைத்தொலைபேசி எடுத்துவர விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்பாக பெற்றோர்களிடம் விளம்பரப்படுத்த வேண்டும்.

* மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உள்ளிட்ட ஆய்வு அதிகாரிகள் பள்ளிகளுக்குச் செல்லும்போது கைத்தொலைபேசி தடை செய்யப்பட்டுள்ளதா என்பதைக் கண்காணிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட உத்தரவுகள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளன.

பள்ளிகளில் கைத்தொலைபேசி தடை தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை மூலமாக ஏற்கெனவே சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன. சில தனியார் பள்ளிகளிலும் கைத்தொலைபேசி தடை அமலில் உள்ளது. ஆனால், பள்ளிகளுக்கு கைத்தொலைபேசி கொண்டுவருவது தொடர்வதாகவும், இதை மாணவர்கள் தவறாகப் பயன்படுத்துவதாகவும் செய்திகள் வந்தன.

இதையடுத்து, கைத்தொலைபேசி முற்றிலுமாக தடை செய்தும், மாணவர்கள் கொண்டுவந்தால் அவற்றை பறிமுதல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

TAGS: