திருவள்ளூர்: தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு பணிமனையில் தொழிலாளர் தமிழக அரசின் நலத்துறை அமைச்சர் செல்லப்பாண்டியன் திடீர் ஆய்வு நடத்தி, ஊழியர்கள் அனைவரையும் கூண்டோடு இடமாற்றம் செய்ய உத்தரவிட்டார்.
திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு பணிமனை ஜெயா நகரில் தனியார் கட்டடத்தில் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் பல ஊழியர்களுக்கு கணினியில் விவரங்களைப் பதிவு செய்யவே தெரியாது. அவர்களுக்கு கணினியை ஆன்-ஆப் மட்டுமே தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், தங்களுக்குகு கணினியில் பதிவு செய்யத் தெரியாது என்பதை மறைக்க பதிவு செய்ய வருவோரிடம் எரிந்து விழுவர். விண்ணப்பங்களில் ஏதாவது குறை இருப்பதாகக் கூறி திருப்பி அனுப்புவர், சரியான பூர்த்தி செய்துவிட்டு வந்தவர்களிடம் எதிரே உள்ள பிரவுசிங் சென்டருக்கு போகச் சொல்வர்.
அந்த மையத்திலுள்ள உள்ள நபர் வேலைவாய்ப்பு பணிமனை இணையத்தில் லாக்-இன் செய்து விவரங்களைப் பதிவு செய்துவிட்டு 100 ரூபாய் வாங்குவார். அதில் 50 ரூபாய் இந்த பணிமனை ஊழியர்களுக்கு கட்டிங்காக தரப்படும்.
இந்த அலுவலகம் குறித்து நெடு நாட்களாகவே புகார்கள் இருந்து வந்தது. பணிமனையில் வேலைவாய்ப்பு பதிவை முறையாக செய்வதில்லை, இணையம் மூலம் பதிவு செய்ய மறுக்கின்றனர், வெளியே இணைய மையங்களுக்கு செல்லுமாறு கூறுகின்றனர். விண்ணப்பங்களை இலவசமாக தருவதில்லை என பல்வேறு புகார்கள் எழுந்தன.
இந் நிலையில் இந்த பணிமனைக்கு அமைச்சர் செல்லப்பாண்டியன் திடீரென வந்தார். முதலில் பதிவு செய்ய வந்தவர்களிடம் சென்று அவர்களிடம் பேசினார். அவர்கள், இந்த வேலைவாய்ப்பு பணிமனையில் முறையாக எதுவும் நடைபெறுவதில்லை. அனைத்துக்கும் பணம் கேட்கின்றனர் என புகார் தெரிவித்தனர். மேலும் கழிப்பறை, குடிநீர் வசதி கூட இங்கு இல்லை என்றும் புலம்பினர்.
பின்னர் பதிவு செய்யும் இடத்துக்குச் சென்றார் அமைச்சர். அங்கு கணினியில் பதிவு செய்ய முடியாமல் ஊழியர் முழித்துக் கொண்டிருந்தார். அவருக்கு கணினியை ஆன்-ஆப் மட்டுமே தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.
பதிவு அட்டையில் ஒரு பெயரும், கணினியில் ஒரு பெயருமாக சிலருக்கு பதிவு செய்யப்பட்டிருந்தன. இதையடுத்து வேலைவாய்ப்பு பணிமனை ஊழியர்களிடம் அமைச்சர் நேரடியாக விசாரணை நடத்தியதோடு, பணிமனை பதிவேடுகளை ஆய்வு செய்தார்.
எல்லாம் பெரும் குழப்படியாக இருக்கவே, அங்கிருந்தே தொலைபேசி மூலம் வேலைவாய்ப்புத்துறை செயலாளரை அழைத்து இந்த பணிமனையின் அனைத்து ஊழியர்களையும் கூண்டோடு இடமாறுதல் செய்யும் உத்தரவை தயார் செய்ய சொன்னார் அமைச்சர் செல்லபாண்டியன்.