ஆமதாபாத் : இந்தியாவின் வடக்கு, கிழக்கு மற்றும் வட கிழக்குப் பகுதிகளில் உள்ள மாநிலங்களுக்கு மின்சாரம் வழங்கும், மின் தொகுப்புகளில் ஒரே நேரத்தில் கோளாறு ஏற்பட்டதால் கடந்த இரு நாட்களாக டில்லி, மேற்கு வங்கம் உட்பட, 19 மாநிலங்கள் இருளில் மூழ்கின. இதனால் மெட்ரோ உள்ளிட்ட ரயில்களின் சேவை, பணிமனைகள் உட்பட பல முடங்கின. மேலும் டில்லியில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. மின்வெட்டால் இம்மாநிலங்களில் வசிக்கும் சுமார் 60 கோடி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் இருளில் மூழ்கியதற்கு மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைதான் காரணம் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து மோடி தனது ட்விட்டர் வலைதளத்தில் கூறியிருப்பதாவது; மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் ஏற்கனவே சாமான்ய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விலைவாசி உயர்வு , பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தலைவரித்து ஆடுகிறது. விலைவாசி உயர்வு என்ற பெயரில் சாமான்ய மக்களின் பையில் பணத்தை பிடுங்கி ஏழைகளின் வயிற்றில் அடித்து வருகிறது மத்திய அரசு. இதுபோதாதென்று, இப்போது மின்வெட்டும் ஏற்படுத்தி மக்களை இருளில் தள்ளிவிட்டுள்ளது காங்கிரஸ் அரசு.
கடந்த இரு நாட்களாக 19 மாநிலங்களில் வசிக்கும் சுமார் 60 கோடி மக்களை, மத்திய அரசு இருளில் தள்ளியுள்ளது. இதற்கெல்லாம் பிரதமர் என்ன சொல்ல போகிறார் என்று மத்திய அரசை கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.
இதனிடையே மின்வெட்டு பிரச்னை விரைவில் சீராகும் என்று புதிதாக இந்திய மின்துறை அமைச்சர் பொறுப்பேற்று இருக்கும் வீரப்பமொய்லி கூறியுள்ளார். மேலும் இந்த பிரச்னைக்கு யாரையும் குறை கூற விரும்பவில்லை என்றும், எல்லாவற்றுக்கும் அமைச்சர் பொறுப்பாக முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.