உணவு வாங்கி வருவதாக ஏமாற்றி பெற்ற தாயை மயானத்தில் தவிக்க விட்டுச்சென்ற மகன்

ஆந்திர மாநிலம் விஜய நகரம் மாவட்டத்தை சேர்ந்தவர் பைடிதல்லி (வயது70). இவரது மகன் சீனு. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வந்தனர்.

சீனுவின் தாயார் பைடிதல்லிக்கும் மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. பைடிதல்லி அங்கு இருப்பது சீனுவின் மனைவிக்கு பிடிக்கவில்லை. அவரை எங்காவது கொண்டு விட்டு விடுமாறு சீனுவை மனைவி அடிக்கடி நச்சரித்தார்.

இதனால் சீனு மனதை கல்லாக்கிக் கொண்டு தாயை எங்காவது விட்டுவிட முடிவு செய்தார். சம்பவத்தன்று வெளியில் சென்று வரலாம் என்று சீனு தாயாரை அழைத்து சென்றார். அவர்கள் விசாகப்பட்டினத்தில் வந்து இறங்கினார்கள். பின்னர் அங்கிருந்து ஒரு ஆட்டோவில் தாயரை சீனு அழைத்து சென்றார்.

ஸ்ரீராம் நகரில் உள்ள மயானம் அருகே ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் ஆட்டோவை நிறுத்தினார். அங்கு தாயாரை இறக்கி விட்டார். நான் சென்று சாப்பிட ஏதாவது வங்கி வருகிறேன் என்று கூறிவிட்டு சென்றார். அதன் பிறகு அவர் வீட்டுக்கு திரும்பி விட்டார்.

மகன் சாப்பாடு வங்கி வருவான் என்று பைடிதல்லி காத்திருந்தார். நீண்ட நேரமாகியும் மகன் வராததால் அவர் அங்கேயே தவித்தார். எப்படியாவது மகன் வந்து விடுவான் என்ற எண்ணத்தில் 10 நாட்களாக அவர் மயானம் அருகிலேயே பட்டினியுடன் கிடந்தார். ஆனால் மகன் வராததால் அவர் மெல்ல மெல்ல நடந்து அருகில் இருந்த ஊருக்குள் சென்று பசியால் மயங்கி கீழே விழுந்தார்.

அந்த பகுதி மக்கள் அவருக்கு உணவு கொடுத்தனர். பின்னர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் பைடிதல்லியை மீட்டு விசாரித்தனர். மகனை கண்டுபிடித்து அவரிடம் பைடிதல்லியை ஒப்படைக்க போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

TAGS: